விவசாயிகளின் போராட்டம்! ஆதரவு தெரிவித்த அமெரிக்க அரசு!

0
64

கடந்த சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் இந்திய குடியரசு தின நாள் அன்று விவசாயிகள் அனைவரும் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டதில் அந்த பேரணி வன்முறை ஆகியது. இந்தநிலையில் விவசாயிகள் போராட்டம் செய்துவரும் தலைநகர் டெல்லியில் எல்லையோர பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன அதேபோல போராட்டம் தொடர்பாக வதந்திகள் பரவுவதை தடுப்பதற்காக இணையதள சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க வெளிநாடுகளை சார்ந்த பல பிரபலங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது அமெரிக்காவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹோலி ஸ்டீவன்ஸ் இந்திய நாட்டில் விவசாய சீர் திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராடி வரும் விவசாயிகள் மீது எடுத்து வரும் நடவடிக்கைகள் கவலை தருகிறது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினையை முடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் வைக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்திய நாட்டில் என்னதான் நடக்கிறது என்று நிலைமையை நாங்கள் தற்போது கண்காணித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார். இன்னொரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் உமர் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுடைய போராட்டத்திற்கு நான் என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தன்னுடைய வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் இந்திய நாடு தன்னுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும் தடையில்லாமல் இணைய சேவையை வழங்க வேண்டும் அதேபோல தடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களின் மருமகள் மீனா ஹரிஷும் இந்தியாவின் ஜனநாயகம் மீது தாக்குதல் நடந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் அயல் நாட்டை சார்ந்தவர்களின் கருத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார்கள். அதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அதோடு பல திரைப்பட துறையினரும், விளையாட்டு துறையினரும் இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ,அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக தன்னுடைய கருத்தை வெளியிட்டு இருக்கிறது. அமைதியான முறையில் நடந்து வரும் போராட்டங்கள் வளர்ந்துவரும் ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது விவசாயத்தை மேம்படுத்துவதற்கு இந்திய நாட்டின் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆதரித்து வருகிறார். இந்தியாவின் சந்தைகளின் செயல்திறனை அதிகப்படுத்தும் மற்றும் அந்தப் பிராந்தியத்தில் தனியார்த்துறை முதலீட்டை அதிகமாக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம் என்று தெரிவித்திருக்கிறது அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகம்.

இரு தரப்பினருமே பேச்சுவார்த்தையின் மூலமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. தற்போது அமைதியாக நடக்கும் போராட்டம் ஜனநாயகத்தின் தனிச்சிறப்பாக விளங்குகிறது என்று நாங்கள் நினைக்கிறோம். இந்திய உச்சநீதிமன்றமும் இதைத்தான் தெரிவித்திருக்கிறது. இணையதளம் போன்ற தகவல் தொடர்பு சேவை தடையில்லாமல் கிடைப்பது கருத்து சுதந்திரத்திற்கு அடிப்படையாக இருக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.