முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராணுவ அதிகாரி!

0
64

கடந்த 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். இதுதொடர்பாக கேள்விப்பட்டவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்து விட்டு உடனடியாக நீலகிரி மாவட்டத்திற்கு விரைந்து வந்து அங்கு இருக்கக்கூடிய நிலவரம் என்ன என்பதை கவனித்து விட்டு உடனடியாக அதிகாரிகளுக்கு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.இது தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது அதோடு தேசிய அளவில் எல்லோரையும் கவனிக்க வைத்தது.

இந்த சூழ்நிலையில், தக்ஷின் பாரத் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் அருண் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் நம்முடைய ராணுவத்தினர் 13 பேர் பலியானார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான தகவல் அறிந்தவுடன் தாங்கள் விரைவாக வந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவ உயர் அலுவலர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் இதயத்தில் இடம்பிடித்து இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் எந்தெந்த உதவிகள் செய்ய முடியுமோ அந்த உதவிகளை அனைத்தையும், தங்களுடைய தலைமையின் கீழ் இருக்கின்ற தமிழக அரசின் ஒட்டு மொத்த நிர்வாகமும் செய்து கொடுத்தது. இது போன்ற ஆதரவு தான் எதிர்காலத்தில் நம்முடைய இளைஞர்கள் தாமாக முன்வந்து இராணுவத்தில் இணைவதற்கும், ராணுவ உடை அணிவதற்கும் உற்சாகமூட்டுவதாக, ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

உங்களுடைய செயல் என்பது பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கும், மூத்த ராணுவ வீரர்களுக்கும், தமிழக அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது என்ற உணர்வை உண்டாக்கி ஊக்கத்தை அளிக்கிறது என்று தெரிவித்திருப்பதோடு இவ்வாறு கடினமான சூழ்நிலைகளில் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததற்கு தங்களுக்கும், அனைத்து அரசு அலுவலர்களுக்கும், நம்முடைய மாநிலத்திற்கும், என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.