இதுக்காகத்தான் மணி அடிக்கிறார்களா?

0
125

கோயிலுக்குச் சென்றால் அங்கே கருவறையில் வீற்றிருக்கும் கடவுளுக்கு அலங்காரம் முடியும் வரையில் திரையிடப்படும். அலங்காரம் முடிவடைந்தவுடன் திரை விலக்கப்பட்டதும் மணி அடிக்கப்பட்டு தீபாராதனை காட்டுவார்கள்.

இப்படி மணியடித்து தீபாரதனை காட்டுவதற்கான அர்த்தம் என்ன என்பது தொடர்பாக ஒரு முறை காஞ்சி மகா பெரியவர் என்றழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் வழங்கிய விளக்கத்தை நாம் இங்கே காணலாம்.

வழிபாட்டின்போது நம்முடைய மனம் பக்தியில் நிலையாக இருக்க வேண்டும், அதைவிடுத்து கவனத்தை எங்கும் சிதற விட்டுவிட்டு இறைவனை வணங்குவதால் எந்தவிதமான பலனுமில்லை.

மந்திரம் சொல்லும் போதும், தியானம் செய்யும் போதும், மனம் மாத்திரத்திலேயே கவனத்தை வைத்திருக்க வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ இறைவனின் தரிசனத்தின் போது மன ஒருமைப்பாடு அந்த அளவிற்கு அவசியமானது என்கிறார்.

ஆலயங்களில் வழிபடும் போது இறைவனைத் தவிர வேறு எந்த எண்ணமும் மனதில் இருக்கக்கூடாது. ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், உடல், உள்ளிட்ட அனைத்தும் நம்முடைய மனதை திசை திருப்பும் சக்தி படைத்தவை.

அவற்றை இறைவனை நோக்கி திருப்புவது தான் வழிபாட்டின் நோக்கமாகும், அலங்காரம் முடிவடைந்து மூலவர் சன்னிதி முன்பு இருக்கின்ற திரையை விளக்கும்போது கடவுளின் திருமேனி அழகில் கண்கள் ஈடுபடுகின்றன என சொல்லப்படுகிறது.

ஆலயத்தில் மற்ற சப்தங்கள் நம்முடைய கவனத்தை ஈர்க்காத விதத்தில் அந்த சப்தங்களை அடக்குவதற்காக மணியோசை ஒலிக்கப்படுகிறது. திரை விலகி இறை தரிசனத்தை கண்டவுடன் நம்முடைய வாய் இறைவனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

பூ, மாலை, கற்பூர, ஆரத்தி தீபம்,தூபம், உள்ளிட்டவற்றால் வெளிப்படும் தெய்வீக நறுமணம் மற்ற எந்த வாசனைகளையும் நுகரவிடாமல் மூக்கை தடுத்துவிடுகிறது.

இரு கரங்களையும் குவித்து இறைவனை வணங்கும் போது உடல் பணிவுடன் இறைவனின் அருளை வேண்டும். ஐம்புலன்களும் வழிபாட்டில் ஈடுபட்டால்தான் ஒருவரின் மனம் ஒருமுகப்படும்.

அந்த நிலையில், பக்தர்களின் உள்ளமும் கூட கோவிலாக மாறும், அதுதான் வழிபாட்டின் தத்துவம் என்று பதிலளித்திருக்கிறார் காஞ்சி சங்கராச்சாரியார்.