ஆரோக்கியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – பத்தாம் வகுப்பு தேர்வுக்கு எதிராக வழக்கு தொடுத்த ஆசிரியர் சங்கம்

0
59

கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறவிருந்த நிலையில் கொரோனா பொது முடக்கம் காரணமாக காலவரையின் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அரசு அறிவித்தது.

இந்தியாவில் பல மாநிலங்கள் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து திருப்புதல் தேர்வின் அடிப்படையில் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்து அறிவித்தது. இதனால் தமிழகத்திலும் இதையே பின்பற்றுவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஜூன் 1ம் தேதி பொது தேர்வு நடைபெறும் என பள்ளி கல்விதுறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு அதற்கான வேலைகள் முழு மூச்சுடன் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா உச்சத்தை அடைந்துள்ள இந்த நிலையில் இந்த தேர்வு அவசியமா என பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்குத் தள்ளிவைக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் “பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களைத் திறப்பது குறித்து, பெற்றோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 9 லட்சத்து 79 ஆயிரம் பத்தாம் வகுப்பு மாணவர்களும், 8 லட்சத்து 41 ஆயிரம் 11-ஆம் வகுப்பு மாணவர்களும், 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதாத 36 ஆயிரத்து 89 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். இந்தத் தேர்வுப் பணிக்கு 3 லட்சத்து 87 ஆயிரத்து 623 ஆசிரியர்களும், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் என 22 லட்சத்து 43 ஆயிரம் பேர் தேர்வுகளில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை பேருடைய ஆரோக்கியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்புக்கு, மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 690 தேர்வு மையங்களிலும், 11-ஆம் வகுப்புக்கு, 7 ஆயிரத்து 400 தேர்வு மையங்களிலும், எத்தனை சுகாதாரப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவர் என அரசு தெரிவிக்கவில்லை. ஊரடங்கால் விடுதிகளில் புத்தகங்களை விட்டுச் சென்ற மாணவர்கள் தேர்வு எழுதுவது கடினம் என்பதால், 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்க்கு முன் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து குறித்து பொது நல வழக்கு தொடுத்த போது அதை நீதி மன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தற்போது ஆசிரியர் சங்கமே இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளதால் இதில் நீதிமன்றம் என்ன நிலை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

author avatar
Parthipan K