மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!!

0
183
#image_title

மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!!

பள்ளி மாணவிகளை தவறாக செல்போனில் படம் பிடித்த புகார் தொடர்பாக கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவரை பரமத்தி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் அருகே கீரம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் பன்னீர்செல்வம் என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது செல்போனில் பள்ளி மாணவிகளை தவறாக படம் எடுத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மாணவியர் சிலர் தங்களது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பெற்றோர் இன்று காலை பள்ளியின் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷமிட்டனர்.

விவகாரம் தீவிரமடைந்ததையடுத்து நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், பரமத்திவேலூர் போலீஸ் டிஎஸ்பி கலையரசன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியரின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதை மாணவியர் பெற்றோர் ஏற்றபோதும் பள்ளி முன்பிருந்து கலைந்து செல்லாமல் அங்கேயே நின்றிருந்தனர்.

பின்னர், பள்ளி தலைமையாசிரியர் சர்மிளாவிடம் விசாரணை நடத்திய போலீஸார் பள்ளியில் இருந்த ஆசிரியர் பன்னீர்செல்வத்தை அங்கிருந்து மீட்டு வெளியே கொண்டுவந்தனர். அப்போது பள்ளியின் முன் திரண்டிருந்த பெற்றோர் மற்றும் போலீஸாரிடையே லேசான ‘தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே சம்பவம் தொடர்பாக ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பரமத்தி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கூறுகையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்,என்றார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறுகையில், ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்,என்றார்.