இந்திய அளவில் ஒலித்த தமிழர்களின் குரல் #தமிழகவேலைதமிழருக்கே ட்விட்டரில் டிரெண்டிங்

0
87

இந்திய அளவில் ஒலித்த தமிழர்களின் குரல் #தமிழகவேலைதமிழருக்கே ட்விட்டரில் டிரெண்டிங்

தமிழக வேலையை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய ஆர்வலர்கள் இன்று சமூக வலைத்தளங்களில் #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹேஷ் டேக்கில் நடத்திய போராட்டம் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.இத்துடன் #TamilnaduJobsForTamils என்ற ஹேஷ் டேக்கும் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தொடர்ந்து பல வருடங்களாக தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழக மக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறார்கள். தமிழக அரசியல் தலைவர்களும்,தமிழ் தேசிய ஆர்வலர்களும் இதை எதிர்த்து குரல் கொடுத்து வந்தனர்.இந்நிலையில் திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனையில் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் வெளியான பழகுனர் (அப்ரண்டீஸ்) பணியிடத்திற்காக ஒரே சமயத்தில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இங்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு நிறுவனங்களின் இந்த செயல்பாட்டை கண்டித்து பொன்மலை ரயில்வே பணிமனையில் நியமிக்கப்பட்ட வடமாநில பணியாளர்களை வெளியேற்றி விட்டு, தமிழர்களுக்கு வேலை வழங்கவேண்டும் என்றும். மத்திய அரசு பணிகளில் மற்ற மாநிலங்களானஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் அம்மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கே வேலை வழங்கும் சட்டம் உள்ளதை போல், தமிழர் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு இன்று தமிழ் தேசிய ஆர்வலர்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதே நேரத்தில் முகநூல் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தமிழ் தேசிய ஆர்வலர்களும்,தமிழக அரசியல் ஆர்வலர்களும் #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils என்ற தலைப்பிலும் தங்களது கருத்துக்களை போராட்டத்திற்கு ஆதரவாக பதிவிட்டு வந்தனர். இவ்வாறு இவர்கள் பதிவிட்டது இந்திய அளவில் தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது.

author avatar
Parthipan K