1957-ம் ஆண்டு திருடப்பட்ட ஆழ்வார் சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு! சிலையை திருடிச் சென்றது யார்..?

0
78

1957-ம் ஆண்டு திருடப்பட்ட ஆழ்வார் சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு! சிலையை திருடிச் சென்றது யார்..?

தமிழ்நாட்டின் பாரம்பரிய சிலைகள் இங்கிருந்து திருடப்பட்டு அதிக பணத்திற்காக வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது. பல காலமாக இந்த திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட “திருமங்கை ஆழ்வார் சிலை’ இங்கிலாந்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

1957 ஆம் ஆண்டு தமிழகத்தின் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் சிலை திருடப்பட்டது. இந்த சிலை 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சிலையாகும். தற்போது பெருமாள் கோவிலில் போலியான வெண்கல சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. இதனையடுத்து, ஆழ்வார் சிலை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கும் அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.

இந்த சிலை 1967 ஆம் ஆண்டு சூத்பி என்னும் ஏல மையத்தின் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளது. இதை அஷ்மோலியன் அருங்காட்சியகம் ஏலத்தில் விலை கொடுத்து வாங்கியுள்ளது. அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருக்கும் திருமங்கை ஆழ்வார் சிலையை பார்வையிட்ட ஒரு தனியார் ஆராய்ச்சியாளர், இது தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட சிலை என்று அருங்காட்சியக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.பின்னர், இங்கிலாந்து இந்திய தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இது உங்கள் சிலைதானா என்பதற்கு மேலும் சில ஆதாரங்களையும் கேட்டனர்.

இதன்பிறகு, தமிழக சிலை தடுப்பு பிரிவு போலீசாரின் அறிக்கை ஒன்று அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சிலை தமிழகத்தை சேர்ந்த திருமங்கை ஆழ்வார் சிலைதான் என்று உறுதி செய்து, இந்தியாவிற்கு அனுப்ப கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து சிலையினை ஒப்படைக்க இங்கிலாந்து அஷ்மோலியன் அருங்காட்சியகம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இருப்பினும், எங்களுடைய குழுவின் முக்கிய பிரதிநிதி இந்தியா வந்து முழு ஆய்வு செய்த பின்னரே சிலை முறையாக ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதனை ஏற்று, உடனடியாக பணியை செயல்படுத்துமாறு இந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். லண்டன் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் ராகுல் நந்த்கரே மூலம் இந்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்தும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து பாரம்பரியமான பல்வேறு சிலைகள் திருடப்பட்டு திரும்பி மீட்கப்படாமல் உள்ளது. தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

author avatar
Jayachandiran