தமிழக அரசு அதிரடி! ரேஷன் பொருட்கள் சரியில்லை என்றால் இனி திருப்பி அனுப்பலாம்!

0
106

அரசு சார்பாக மாநிலம் முழுவதும் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகள் மூலமாக, அன்றாட மாதம்தோறும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள் பெரிய அளவில் பயன்பெற்று வருகிறார்கள். ஆனால் இந்த நியாய விலை கடை ஊழியர்களும், கூட்டுறவு துறை ஊழியர்களும், செய்யும் ஒரு சில தவறுகளால் ஏழை, எளிய, மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்களில் மிகப்பெரிய தவறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சில சமயம் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் அரிசி, உளுந்து, உள்ளிட்ட பொருட்கள் சரியில்லையென்றால் பொது மக்கள் பெரிய அளவில் யாரிடமும் புகார் தெரிவிக்க இயலாது. ஆகவே கொடுத்ததை வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள். அவர்கள் வாங்கிச் சென்றாலும் சமைத்து சாப்பிடும் அளவிற்கு அந்த பொருட்கள் இருக்காது என்பது நிதர்சனம்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த மாதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஆரம்பமானது முதல் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது. இது தொடர்பாக விரிவாக விசாரணை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமற்ற அரிசி உள்ளிட்டவை வினியோகம் செய்வதாக புகார் எழுந்திருக்கிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ரேஷன் கடைகளில் இருக்கின்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், நியாயவிலை கடைகளுக்கு வரக்கூடிய பொருட்கள் தரமாக இல்லையென்றால் ஊழியர்கள் திருப்பியனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

நுகர்பொருள் வாணிப கழகத்திலிருந்து  ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் தரமாக உள்ளதா? என்பதை அதிகாரிகள் பார்வையிட வேண்டும் எனவும், அரசு ஊழியர்கள் இதனை உறுதி செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நியாயவிலை கடைகளில் நடத்தப்படும் ஆய்வின் போது காலாவதியான பொருட்கள் உள்ளதா? என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவையடுத்து இனி அனைத்து மக்களுக்கும் தரமான நியாய விலை கடை பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ரேஷன் கார்டுதாரர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.