இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மகள் திருமண வரவேற்பு விழாவில் எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட அவமானம்!

0
81

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மகள் திருமணத்தில் பல்வேறு நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் என்று பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். அத்துடன் தமிழக முதலமைச்சரும் இந்த விழாவில் பங்கேற்றார்.

இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்பதற்காக வந்த பொன்னேரி தனி தொகுதி காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சுந்தரம் வீட்டில் அவரை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். அப்போது அவரை கட்சியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் சாமி நாசர் டிஜே கோவிந்தராஜன், பொன்னேரி சட்டசபை உறுப்பினர் துரை சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதன்பிறகு கவரைப்பேட்டை அருகே உள்ள ஏ.ஆர்.ஆர் பிலிம் சிட்டியில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மூத்த மகள் கதிஜா ரஹ்மான், ரியாசுதீன் ஷேக் முகமது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

அதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண வரவேற்பு விழாவில் அங்கு இசைப்பயிலும் மாணவர்கள், இசைக்கலைஞர்கள், உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள்.

ஏ ஆர் ரஹ்மானின் மகள் திருமண வரவேற்பில் முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டசபை உறுப்பினர்களுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது.

திமுக சட்டசபை உறுப்பினர்களுடன் வந்த பொன்னேரி தனி தொகுதி காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து அவர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அவரும், அவருடன் வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

முன்னதாக முதலமைச்சர் வருகையை முன்னிட்டு சாலைகளில் ஆங்காங்கே இருக்கின்ற பள்ளங்கள் உள்ளிட்டவை 1 மணி நேரத்திற்கு முன்பாகவே உடனடியாக சீரமைக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சர் வருகை காரணமாக, கவரப்பேட்டை, சத்தியவேடு சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு உண்டானது. இதனால் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளானார்கள்.