மோடியின் தொகுதியிலிருந்த ஒரே தமிழ் பள்ளியும் மூட உத்தரவு! இது தான் தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவமா?

0
97
Modi-News4 Tamil Online Tamil News
Modi-News4 Tamil Online Tamil News

மோடியின் தொகுதியிலிருந்த ஒரே தமிழ் பள்ளியும் மூட உத்தரவு! இது தான் தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவமா?

அகமதாபாத்தில் உள்ள ஒரே ஒரு தமிழ் மேனிலைப் பள்ளியை மூடும் நடவடிக்கைக்கு மாணவர்களும், பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மணிநகரில் உள்ளது அகமதாபாத் தமிழ் மேனிலைப் பள்ளி. கிருஷ்ணமாச்சார்ய பண்டித் என்பவர் தமிழ் மக்களுக்காகவும், அவர்களது கல்விக்காகவும் மட்டுமே இந்த இடம் பயன்பட வேண்டும் என்று இடத்தை ஒதுக்கி இந்தப் பள்ளியை நிறுவியுள்ளார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணனால் 1954 ஆம் ஆண்டு இந்தப் பள்ளி திறந்து வைக்கப்பட்டது.

வரலாற்று பெருமை வாய்ந்த இந்த பள்ளியில் தற்போது ஒன்பதாம் வகுப்பில் 6 மாணவர்களும், 10ஆம் வகுப்பில் 7 மாணவர்களும், பதினொன்றாம் வகுப்பில் 12 மாணவர்களும், 12ஆம் வகுப்பில் 6 மாணவர்களும் என 31 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் பற்றாக்குறை எனக்கூறி மாவட்ட கல்வி அதிகாரி இந்த தமிழ் வழியிலான பள்ளியை மூட ஆணையிட்டுள்ளார்.

அதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று மாணவர்கள் அனைவரும் தங்களது மாற்று சான்றிதழை பள்ளியில் வந்து பெற்றுகொள்ளுமாறு அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில் பள்ளியை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக்கு வரும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பெற்றோர்களும், முன்னாள் மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களுக்காக கிருஷ்ணமாச்சாரிய பண்டித் நிறுவிய பள்ளியை அழிக்கும் முடிவில் கல்வி அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக, அங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழின் பெருமைகள் குறித்து அடிக்கடி பேசும் பிரதமர் மோடி, இந்த பள்ளி உள்ள மணிநகர் தொகுதியில் போட்டியிட்டு தான் குஜராத் முதலமைச்சரானது குறிப்பிடத்தக்கது.இது தான் பிரதமாரான மோடி தமிழ் மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவமா என்றும் தமிழ் ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

author avatar
Ammasi Manickam