கோகுல்ராஜ் வழக்கில் பிழற்சாட்சியான சுவாதி.. சத்தியம் என்றைக்கும் சுடும் என நீதிபதிகள் கருத்து..!

0
139

கடந்த 2015ம் ஆண்டு சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார், அவர் சுவாதி என்ற இளம்பெண்ணை காதலித்ததாகவும் இதனால், சுவாதியின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அவரை ஆணவ கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இதனை அடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் என மொத்தம் 15 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணையில்,யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. இதனை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கோகுல்ராஜ் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த சுவாதி ரகசிய வாக்குமூலம் அளித்தார். ஆனால், சில காலங்களுக்கு பிறகு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.  இடைப்பட்ட காலத்தில் ஏதோ நடத்திருக்கிறது எனவும்  அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, இன்று காலை அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்நிலையில், கொகுல் ராஜ் சக மாணவர்களிடம் பேசுவது போல உங்களுடன் பேசுவாரா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஆம் என பதிலளித்தார். 23.6.2015 அன்று கோகுல்ராஜை பார்த்தீர்களா? அன்று நடந்த சம்பவம்  உங்களுக்கு நியாபகம் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு சுவாதி அன்று தான் அவரை பார்க்கவில்லை என தெரிவித்தார். அதனை தொடர்ந்து வீடியோ ஒன்றை காட்டிய நீதிபதிகள் அதில் உள்ள பெண் ,ஆண் யார் என கேள்வி எழுப்பினர், அப்போது அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என தெரிவித்த சுவாதி பின்னால் வரும் ஆண் கோகுல்ராஜ் போல உள்ளதாக கூறினார். மீண்டும் வீடியோ ஒளிபரப்பபட்ட போதும் அவர் கண்ணீர் மல்க அதே பதிலையே தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதி தெரிவிக்கையில், ரகசிய வாக்குமூலத்தில் கூறியதற்கும் தற்போது கூறுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.வீடியோவில் உங்களை பார்த்து யார் என தெரியவில்லை என்கிறீர்கள் ஜாதியை விட சத்தியம் முக்கியம் என தெரிவித்தனர். நீங்கள் பேசிய ஆடியோவை சோதனைக்கு அனுப்பியுள்ளோம் அதில் உண்மை தெரிந்து விடும் என தெரிவித்தார்.

இதனை கேட்ட சுவாதி கண்ணீர் விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அவர் மயக்கமடைந்ததால் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்ததோடு வரும் 30ம் தேதி சுவாதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். சத்தியம் என்றைக்கெனும் சுடும் என சுவாதியிடம் கூறிய நீதிபதிகள் அடுத்த முறையும் இதே தெரிவித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தெரிவித்தனர்.