ஊரடங்கு நேரத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
68
Supreme Court-News4 Tamil Online Tamil News
Supreme Court-News4 Tamil Online Tamil News

ஊரடங்கு நேரத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டுமா? கூடாதா என்பது குறித்து விளக்கமளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போதுள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க முடியாத நிறுவனங்கள் மீது கட்டாய நடவடிக்கை கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த மே 15 அன்று பிறப்பித்த உத்தரவை, ஜூன் 12 வரை நீட்டித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தனது சுற்றறிக்கையில், இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும் அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் தங்களிடம் பணிபுரியும் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கவோ அல்லது அவர்களின் சம்பளத்தை குறைக்கவோ வேண்டாம் என்றும் முதலாளிகளுக்கு அறிவுறுத்துமாறு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதியிருந்தார்.

இதனையடுத்து மத்திய அரசின் இந்த வழிகாட்டுதல்களுக்கு எதிராக சிறு தொழில் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஊரடங்கின் போது தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க முடியாத நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் மீது எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கடந்த மே 15 அன்று அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இம்மனுவை வீடியோ கான்பிரன்சிங் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். இதில் தொழில் தகராறுகள் சட்டத்தின் சில விதிகள் செயல்படுத்தப்படாத போது, ஊழியர்களுக்கு 100 சதவீத சம்பளம் வழங்காததற்காக முதலாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா என மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் தொழிலாளர்கள் சம்பளமின்றி இருக்கக்கூடாது என்ற கவலையும் உள்ளது, அதே நேரத்தில் தொழில்துறையினருக்கு தற்போது பணம் செலுத்த முடியாத சூழ்நிலையும் இருக்கலாம், இதனால் இரு தரப்புக்கும் இடையே சமநிலை தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஊரடங்கின் 54 நாட்கள் சம்பளத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ள முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் உள்துறை அமைச்சக அறிவிப்பின் செல்லுபடி குறித்து 3 நாட்களில் பதிலளிக்குமாறும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அவகாசம் வழங்கினர்.