கொரோனா சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து!! பீதியில் நோயாளிகள்

0
56

ஆந்திர மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட சொகுசு ஓட்டலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சொர்ணா பேலஸ் என்ற சொகுசு ஓட்டலை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி இருந்தனர். இங்கு சுமார் 50 கொரோனா நோயாளிகள் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மேலும், அங்கு இவர்களுடன் 20 மருத்துவர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் சிகிச்சை மையம் முழுவதும் அடர்த்தியான புகை பரவியது. இதனால் கொரோனா நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிர்பிழைப்பதற்காக மாடியில் இருந்து குதித்த 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இரண்டு மற்றும் மூன்றாவது மாடியில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை ஏணி மூலம் கீழே அழைத்து வரப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சாதாரணமாகவே மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.

தீ விபத்தில் பரவிய அடர்த்தியான புகை காரணமாக நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க, நோயாளிகளை விரைவாக லேடிபேட் பகுதியிலுள்ள ரமேஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா சிகிச்சை மையத்தில் அதிகாலையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

author avatar
Parthipan K