ஓபிஎஸ்ஸுக்கு இப்படியும் ஒரு சிக்கல்! தம்பி ஓ ராஜா கொலை மிரட்டல் முனியாண்டி கொடுத்த புகார்!

0
85
Such a problem for OPS! Munyandi's complaint of threatening to kill brother O Raja!
Such a problem for OPS! Munyandi's complaint of threatening to kill brother O Raja!

ஓபிஎஸ்ஸுக்கு இப்படியும் ஒரு சிக்கல்! தம்பி ஓ ராஜா கொலை மிரட்டல் முனியாண்டி கொடுத்த புகார்!

 ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தங்கள் நிலத்தை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும், பணத்தைக் கேட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் ஒருவர் புகார் அளித்துள்ளார்.ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையேயான மோதலால், இருதரப்பினரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் தம்பி ராஜா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு, கட்சியிலும் நீதிமன்றத்திலும் தொடர்ச்சியாக சறுக்கல் ஏற்பட்டு வரும் நிலையில், அவரது தம்பி மீதான புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் திருச்செந்தூரில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சசிகலா சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியின் கொள்கைக்கு முரணாகச் செயல்பட்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.ராஜா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு அழுத்தத்தின் பேரில், தனது உடன் பிறந்த தம்பியையே கட்சியை விட்டு நீக்கும் அறிவிப்பில் கையெழுத்திட்டார்.ஓ.பன்னீர்செல்வம்
ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ் தம்பி அதற்கு முன்பு 2018ஆம் ஆண்டிலும், மதுரை, தேனி மாவட்ட அதிமுகவில் ஓ.ராஜாவின் தலையீடு அதிகரித்ததன் காரணமாக தலைமைக்கு புகார்கள் பறந்ததையொட்டி ஓ.ராஜா நீக்கி வைக்கப்பட்டிருந்தார். இதிலும் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கையெழுத்திட்டிருந்தனர். பின்னர், ஓ.ராஜா தலைமைக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியதாக அவர் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனியில் தற்போது, ஓபிஎஸ் இபிஎஸ் மோதல் முற்றி, ஓபிஎஸ் தரப்பினரை கட்சியில் இருந்து முழுமையாக நீக்கி, இடைக்கால பொதுச் செயலாளராகி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியிலேயே தனக்கான ஆதரவாளர்களை அதிகரித்துள்ளார் இபிஎஸ். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களிலேயே முக்கால்வாசிப் பேர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்ட எஸ்.பியிடம் முனியாண்டி என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனக்கு சொந்தமான நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு நிலத்திற்குரிய பணத்தை தராமல் கடந்த 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பதுடன், பணத்தைக் கேட்டால் கொலை செய்து விடுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.
ஓ.ராஜாவின் பினாமி?:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி ஜெயந்திநகரைச் சேர்ந்தவர் முனியாண்டி (59). இவருக்கு சொந்தமாக 83 சென்ட் நிலம் கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி கிராமத்தில் உள்ளது. இந்ந நிலத்தை கடந்த 2010ஆம் ஆண்டு தங்கள் மகளின் திருமண செலவுக்காகவும், குடும்ப செலவுக்காகவும், விற்பனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது இந்த நிலத்தை தான் வாங்கிக் கொள்வதாக கூறிய ஓ.ராஜா ரூபாய் 40 லட்சத்திற்கு கிரையம் பேசி, கிருஷ்ணன் என்பவரின் பெயரில் பவர் எழுதித் தரச் சொல்லியுள்ளார். இதனையடுத்து முனியாண்டியின் மனைவி, கிருஷ்ணனின் பெயருக்கு பவர் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கொலை மிரட்டல்:
பின்னர் ஓ.ராஜாவிடம் பணம் கேட்டபோது அவர் பணம் தராமல் இழுத்தடித்ததாகவும், இதுகுறித்து பலமுறை அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் பணம் தர முடியாது அதனையும் மீறி பணம் கேட்டால் உங்களை கொலை செய்து புதைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் அந்த புகாரில் முனியாண்டி தெரிவித்துள்ளார். மேலும் தங்களிடம் பவர் எழுதி வாங்கிய கிருஷ்ணன் என்பவர் ஓ.ராஜாவின் மற்றொரு பினாமியான விஜயகுமார் என்பவருக்கு எங்களது நிலத்தை விற்பனை செய்தது போல் ஒரு பத்திரத்தை தயார் செய்து வைத்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை காவல்துறையில் மனு அளித்தும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தும் இதுவரை ஓ.ராஜா மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, தற்போது ஓ.ராஜா அந்த நிலத்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்ய முயன்று வருவதால் அந்த விற்பனையை தடுத்து அந்த நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஓ.ராஜா, கிருஷ்ணன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் தங்களை கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது சொத்தை திரும்ப மீட்டுத் தர வேண்டும் என்றும் முனியாண்டி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். ஓபிஎஸ் தம்பி மீது தேனி மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.