இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை! 

0
119

இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை! 

இடிக்கப்பட்ட ஆரம்பப் பள்ளியின் கட்டிடங்கள் மீண்டும் கட்டப்படாததால் மாணவ மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள இந்து ஆரம்பப்பள்ளி இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படாததால் மாணவ மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர்.

கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இந்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த பள்ளியில் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற இந்து ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி பள்ளி கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் புதியதாக கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனால் பள்ளியின் பழுதடைந்த கட்டிடங்கள் ஒரு மாடி கட்டிடம் தவிர அனைத்தும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

இந்தப் பள்ளியில் 160 மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு போதுமான வகுப்பறை கட்டிடம் இல்லாததால் அருகிலுள்ள பெருமாள் கோவிலில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இது மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட சேவூர் எம்எல்ஏ ராமச்சந்திரன் அவர்கள் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து தருவதாக கூறினார். ஆனால் இதுவரை வகுப்பறை கட்டிடம் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் மேற்கு ஆரணி ஒன்றியம் சார்பில் புதிய வகுப்பறை கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

மேலும் பள்ளி மாணவ மாணவியர் சத்துணவிற்காக பழைய பள்ளிக்கட்டிடம் உள்ள இடத்திற்கு கோவிலில் இருந்து செல்லும் பொழுது சாலையை கடக்கும் இடங்களில் அஜாக்கிரதையாக செல்லும் நிலைமை உள்ளதால் பள்ளி கட்டிடம் உடனடியாக கட்டப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.