பாதிக்கப்பட்ட ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி! அதிர்ச்சியில் ஸ்டெர்லைட்!

0
63

நாடு முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்த இரண்டாவது அலையின் பாதிப்பிலிருந்து யாராலுமே தப்ப முடிவதில்லை.பெரிய பெரிய ஜாம்பவான்களும் தற்போது இந்த நோய்க்கு ஆளாகி வருகிறார்கள். மத்திய ,மாநில அரசுகளும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மிக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் பொதுமக்கள் இதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாத காரணத்தால், இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்துவருகிறது.

அத்தோடு ஆக்சிஜன் பற்றாக்குறையும் நாட்டில் மிக மோசமாக இருந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை மிகவும் அதிகரித்திருக்கிறது. அதோடு ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளும் அதிகமாக நிகழ்கின்றன.இதனை கருத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசும் அனுமதி கொடுத்தது, இதனை அடுத்து கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு இந்த குழுவினர் ஆய்வு செய்து அதன் பின்னர் ஆக்சிஜன் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் இரவில் ஆக்சிஜன் வினியோகம் ஆரம்பமானது.அதன்படி தலைநகர் சென்னை மற்றும் கோவை போன்ற மாவட்டங்களுக்கு இரண்டு டேங்கர் லாரிகள் மூலமாக ஆக்சிஜன் அனுப்பிவைக்கப்பட்டது.இந்த நிலையில், அந்த அறையிலிருந்து 4.82 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் நேற்றையதினம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஆக்சிஜன் தயாரிக்கும் பணி தற்சமயம் நிறுத்தப்பட்டு இருப்பதாக ஸ்டெர்லைட் ஆலை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது!