சி எஸ் கே அணியிலாவது தோனிக்கு எதிர்காலம் இருக்கிறதா ? வெளியானது முக்கியத் தகவல் !

0
61

சி எஸ் கே அணியிலாவது தோனிக்கு எதிர்காலம் இருக்கிறதா ? வெளியானது முக்கியத் தகவல் !

தோனி அடுத்த ஆண்டும் சி எஸ் கே அணியில் தொடர்ந்து விளையாடுவார் என அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். ஆனால் இந்த ஆண்டு அவர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இதன் மூலம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது.

தோனி, கடைசியாக 2019 ஆம் ஆண்டு நியுசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனி இந்திய அணிக்காக இனிமேல் தொடர்ந்து விளையாடுவது பகல்கனவுதான் என்ற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சி எஸ் கே அணிதான்.

ஐபிஎல் போட்டிகள் அறிமுகம் ஆனதில் இருந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தோனி சென்னை தனது இரண்டாவது தாய்வீடு என சொல்லி இருக்கிறார். தற்போது 38 வயதாகும் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் –ல் சென்னை அணிக்கு தலைமை தாங்க உள்ளார். ஆனால் அடுத்த ஆண்டு வீரர்களை முழுவதுமாக விடுவிக்கும் ஏலம் நடக்க இருப்பதால், தோனியை விடுவிக்க சி எஸ் கே நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்பட்டது. இது சி எஸ் கே ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனரும் சி எஸ் கே அணி உரிமையாளருமான சீனிவாசன் ‘தோனி இந்த ஆண்டு சென்னை அணிக்குத் தலைமை தாங்குவார். அடுத்த ஆண்டு ஏலத்திலும் அவர் சி எஸ் கே அணியில் தக்கவைக்கப் படுவார். அவர் விரும்பும் வரை தொடர்ந்து சென்னை அணியில் ஆடுவார்.’ என நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

author avatar
Parthipan K