இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து ஐநா சபையில் பேச்சு!!

0
174
#image_title

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து ஐநா சபையில் பேச்சு!!

சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் பெருமிதம்

ஐ.நா சபையிலேயே இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து பேசப்பட்டிருப்பதாக, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது,

கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு திமுக அரசு .2021 இல் 34,579 கோடி ஒதுக்கிய நிலையில்,

இந்த ஆண்டு 40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டி உள்ளோம். 1283 பள்ளிகளில் புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

6000 வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட உள்ளன. அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் தேவை அதிகமாக உள்ளது. விரைவில் இவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

காலை சிற்றுண்டி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் காரணமாக பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்து இருக்கிறது.

ஐநா சபையில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து பேசப்பட்டு இருக்கிறது. கொரோனா கால கற்றல் இழப்புகளை 25 விழுக்காடு, இல்லம் தேடி கல்வித் திட்டம் சரி செய்திருக்கிறது. சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ், இதுவரை நம்ம ஸ்கூல் திட்டத்திற்காக 68 கோடியே 48 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது.

1025 அரசு பள்ளி மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்

இவர்களில் இருந்து பலர் அட்வான்ஸ்டு தேர்வு எழுத உள்ளனர். அந்த அளவிற்கு அரசு பள்ளி மாணவர்கள் மேம்பட்டு இருக்கிறார்கள்.

ஆசிரியர்களை இந்த அரசு கைவிடாது. ஆசிரியர்களை மதிக்கும் நாடுதான் முன்னேறிய நாடாக விளங்க முடியும். எனவே, ஆசிரியர் நலனில் இந்த அரசு அக்கறை கொண்டிருக்கிறது.

10143 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.