தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முழு விவரம்!

0
148

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அதன்படி போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய வழித்தடங்களில் இன்று (நவ. 11) முதல் 13ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்த 3 நாட்களும் சென்னையில் இருந்து 9,510 சிறப்பு பேருந்துகள், மற்ற பகுதிகளில் இருந்து 5,247 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து நவ. 11, 12, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் 9,510 பேருந்துகளில், 11ம் தேதி 2,225 பேருந்துகளும், 12ம் தேதி 3,705 பேருந்துகளும், 13ம் தேதி 3,580 பேருந்துகளும் என பிரித்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. மேலும், சென்னையில் போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சிறப்புப் பேருந்துகள் 5 இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5 சிறப்பு பேருந்து நிலையங்கள்:

  • மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்
  • தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (மெப்ஸ்) மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்
  • பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்
  • புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் (கோயம்பேடு)
  • கே.கே. நகர் பேருந்து நிலையம்

மேலும், இந்த சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் சென்றிட ஏதுவாக, சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் இருந்து 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை பின்பற்றுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

author avatar
Parthipan K