ஞாயிறு முழு ஊரடங்கு! வெறிச்சோடி காணப்பட்ட தலைநகர் சென்னை!

0
75

கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை பரவல் தற்சமயம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றின் பிடியில் சிக்கி கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6ம் தேதி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய சேவை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நடமாட்டம் எதுவும் இல்லாமல் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன, தலைநகர் சென்னையில் நேற்று முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னையில் நேற்று அனைத்து சாலைகளும் வாகன நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

அண்ணாசாலை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை, பாரிமுனை என்எல்சி போஸ் சாலை, டைடல் பார்க் சாலை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் ரோடு, மெரினா காமராஜர் சாலை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, கிண்டி சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, அடையாறு எல் பி சாலை, ராஜாஜி சாலை, உட்பட நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டிருந்தனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன, மேம்பாலங்கள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டிருந்தனர்.

அதேபோல நகரின் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இதன்காரணமாக, தியாகராய நகர், வண்ணாரபேட்டை, பாரிமுனை, பெரம்பூர், அண்ணாநகர், உட்பட கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் நேற்று வெறிச்சோடி நிலையில் இருந்தனர். தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் நேற்று ஆளரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மீன் சந்தைகள், இறைச்சிக்கடைகள், என்று மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. போக்குவரத்து முடக்கம் காரணமாக, பேருந்துகள் இயங்கவில்லை. அதேபோல வழிபாட்டுத்தலங்கள், தேவாலயங்கள், மசூதிகள், என்று அனைத்தும் மூடப்பட்டன என்று சொல்லப்படுகிறது.

திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், அழகுசாதன நிலையங்கள், டாஸ்மாக் கடைகள், பார்கள், பெரிய அரங்குகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள், எல்லாமே மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள், வழக்கம்போல இயங்கியதாக சொல்லப்படுகிறது.

சாலைகளில் போக்குவரத்து காவல்துறையை சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள், சாலையில் தேவையில்லாமல் சுற்றி திரிந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் வைத்திருந்த நிகழ்ச்சிகளுக்குச் செல்வோர் மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோரை காவல்துறையினர் அனுமதித்தார்கள். அதோடு வாகனங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். தேவையில்லாமல் கூட்டம் கூட்டமாக நிற்பவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்த பட்டார்கள்.

அதேபோல மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மையூர், பெசன்ட் நகர், உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாதவாறு காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தார்கள். சென்னையில் நகர்ப்புறங்கள் போலவே புறநகர் பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

முழு ஊரடங்கு என்ற காரணத்தால், பொதுமக்கள் நேற்று வீடுகளிலேயே முடங்கி இருந்தனர், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொது மக்கள் நடமாட்டத்தை பார்க்க இயன்றது. அந்த விதத்தில் ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கியதை அனைவராலும் உணர்ந்துகொள்ள முடிந்தது.