seeman decision for alliance with makkal needhi maiam
seeman decision for alliance with makkal needhi maiam

நடிகர் கமலின் மக்கள் நீதி மைய்யத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணியா? சீமான் எடுத்த திடீர் முடிவு

ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுவதையடுத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ்,விசிக,மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு அணியாகவும் மற்றும் அதிமுகவுடன் பாமக,பாஜக,தேமுதிக போன்ற கட்சிகள் இணைந்து ஓரணியாகவும் செயல்பட்டு வருகின்றன.
அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவினால் சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்களால் ஆரம்பிக்கபட்ட அமமுகவுடன் எந்த கட்சியும் சேராமல் தனித்து விட பட்டதால் தனியாக நிற்பதாக அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஏற்பட்ட சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி அரசியலுக்கு வந்த நடிகர் கமலஹாசனும் மக்களவை தேர்தலுக்கான நிலைப்பாட்டை தெளிவாக கூறவில்லை.
இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியும் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மைய்யமும் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து இன்று விளக்கமளித்த சீமான் கூட்டணியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்தை அறிமுகப்படுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மயிலை மாங்கொல்லையில் வரும் 23 ஆம் தேதி நடைபெறுவதாகவும் அதன் பிறகு 25 ஆம் தேதி முதல் தான் பிரச்சாரத்தை தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாகவும் முதல்முறையாக வரலாற்று நிகழ்வாக பெண்களுக்காக 50 சதவீத இடங்களை ஒதுக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா? என்று தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு. எந்த சூழ்நிலையிலும் அதுபோன்று கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது என்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக பாகிஸ்தானுடனான உறவை அரசியல் ஆக்குகிறது என்றும், சமீபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை வைத்து, பாஜக அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் இந்த நிகழ்ச்சியின் போது நாம் தமிழர் கட்சிக்காக புதியதாக வழங்கப்பட்டுள்ள கரும்பு விவசாயி சின்னத்தை சிறந்ததாக கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.