கமலஹாசன் அதிக வாக்குகள் பெற்றது எப்படி? சீமானின் சர்ச்சை பேட்டி

0
93

கமலஹாசன் அதிக வாக்குகள் பெற்றது எப்படி? சீமானின் சர்ச்சை பேட்டி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் என இரண்டு பெரிய அணியில் தமிழக கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

இதில் திமுகவுடன் தேசிய கட்சியான காங்கிரஸ்,மதிமுக,விடுதலை சிறுத்தைகள் கட்சி,இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி என மிகவும் வலிமையான கூட்டணியை அமைத்து போட்டியிட்டன. அதே போல் அதிமுகவுடன் ஆளும் தேசிய கட்சியான பாஜக,பாமக,தேமுதிக,புதிய தமிழகம் மற்றும் தமாக போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

இந்த இரண்டு அணிகளையும் தவிர நடிகர் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி, நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதிமுகவிலிருந்து பிரிந்த தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என தனித்தனியாக போட்டியிட்டன.

தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தாலும் தனித்து களமிறங்கிய சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் என இரண்டு கட்சிகளும் கணிசமான வாக்குகளை பெற்றிருக்கின்றன.

இதில் நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து பல ஆண்டுகளாகியுள்ள நிலையில் கட்சி ஆரம்பித்து ஒரு ஆண்டு கூட முடிவடையாத நிலையில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் நாம் தமிழர் கட்சிக்கு இணையாக வாக்குகளை பெற்றுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில், மக்கள் வாக்குகளை பெற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் போதும் சுலபமாக வாக்குகள் கிடைத்து விடும் என நகைச்சுவையாக கூறிய அவர் கமல் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் தான் முடிந்துள்ளது என்பது உண்மையல்ல, நடிகர் ரஜினி மற்றும் கமல் போன்றவர்கள் நடிக்க ஆரம்பிக்கும் போதே அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் எனவும், கடந்த காலத்தில் அறிஞர் அண்ணா மட்டுமே கால் நூற்றாண்டுகளுக்கு மேல் போராடி மக்களை சந்தித்து தலைவரானார் என்றும், எம் ஜி ஆர் உட்பட மீதியுள்ளவர்கள் அனைவரும் அவரது புகழை பயன்படுத்தி தலைவராகி விட்டார்கள் என்றும் கூறினார்.

கட்சி ஆரம்பித்தது முதல் தொடர்ந்து மக்களை சந்தித்து வந்த கமலஹாசன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை கூட நன்கு ஆராய்ந்து படித்தவர்கள்,பல்துறை வல்லுநர்கள்,ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் என நிறுத்தினார். கடந்த காலங்களில் நடந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சியின் அவலங்களை பார்த்த மக்கள் அவர்களுக்கு மாற்றாக கமலஹாசனையும் ஏற்று கொண்டு அளித்த வாக்குகளை பிக் பாஸ் நிகழ்ச்சியால் வந்தது என்று சீமான் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K