முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்:!ஸ்டாலினின் உருக்கமான கடிதமும் தொண்டர்களுக்கு விடுத்துள்ள உறுதிமொழியும்?

0
83

தமிழகத்தின் 5 முறை முதல்வராக விளங்கிய திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள்,கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி காவிரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.அவர் நம்மை விட்டு நீங்கி 2 இரண்டு வருடங்களாகியும் அவரின் நினைவுகளும் அவர் ஆற்றிய பணிகளும்,மக்களிடையே நீங்கா வண்ணம் இருக்கின்றன.இன்று ஆகஸ்ட் 7 முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.

இரண்டாம் ஆண்டு நிணைவஞ்சயையொட்டி தற்போதிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு ஒரு கடிதத்தை உருக்கமாக எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியவாறு:

எத்திசை திரும்பினாலும் எனக்குத் தலைவர் கருணாநிதியின் திருமுகம்தான் தெரிகின்றது.திமுகவின் இயக்கத்திற்காக எந்தப் பணியை மேற்கொண்டாலும் அவர் நினைவுதான் என் நெஞ்சத்தை வருடுகிறது. நான் கருணாநிதி மடியினில் தவழ்ந்து, அவர் கரம் பற்றி நடந்து, அவர் நிழலின் கதகதப்பில் வளர்ந்த மகன் என்பதைவிட, அந்த கரகரப்பான காந்தக்குரலின் அன்புக் கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்ட சிப்பாயாக கருணாநிதியின் கோடிக்கணக்கான தொண்டர்களில் ஒருவன் என்பதிலையே எனக்கு பெருமை. அரை நூற்றாண்டு காலம் அவர் தலைமையேற்றுக் கட்டிக்காத்து வளர்த்த இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கும் உங்களில் ஒருவன் என்பதே எனக்கு இன்பத்தை தருகிறது.

கருணாநிதியை இயற்கையின் சதி பிரித்துவிட்டு இரண்டு ஆண்டுகளானாலும், முத்தமிழ் அறிஞரை நம் இதயத்திலிருந்து அவற்றில் எழும் எண்ணத்திலிருந்து நம் உதிரத்திலிருந்து உணர்வுகளிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாதவராக, ஒவ்வொரு தொண்டர்களின் மூச்சுக் காற்றிலும் கலந்திருக்கிறார். தொண்டர்கள் மட்டுமல்ல, கட்சி சார்பற்ற நண்பர்களும் அவர்களில் உண்டு. தமிழக மக்களின் எண்ணங்களில் தன்னிகரற்ற தமிழாக கருணாநிதி வாழ்கிறார்.

நம் உயிர் நிகர் தலைவரின் திட்டங்களால் ஒவ்வொரு இல்லத்திலும் விளைந்த நற்பயன்களை நன்றியுள்ள உள்ளங்கள் ஒவ்வொரு நாளும் நினைத்துப்பார்த் தவறினதில்லை. அதனால்தான், இயற்கையின் சதி நம்மிடமிருந்து அவரைப் பிரித்தபோது, வங்கக் கடற்கரையில் அவருக்கு இடம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக வெளிப்பட்டடு அதனையும் சட்டரீதியாகப் போராடிப் சாதித்துக் காட்டிய உங்களில் ஒருவனான என்னைத் தலைமைப் பொறுப்பில் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகம்.

இறப்பிலும் சளைக்காத இடஒதுக்கீட்டுப் போராளி என மக்களின் மனதில் கருணாநிதி நிலைத்திருக்கிறார். இந்தியாவின் பன்முகத்தன்மையும் மதச்சார்பற்ற கொள்கையும் சோசலிசப் பார்வையிலான நலத்திட்டங்களும் நாடெங்கும் பரவிட துணை நின்ற மூத்த அரசியல் தலைவராக முத்தமிழ் அறிஞர் கலைஞர் திகழ்கிறார்.

இன்று இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பெரும் சவால் உருவாகியுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு ஜனநாயகத்தைச் சிதைக்கும் மத்திய அரசு,மத்திய அரசிற்கு, சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற இந்தக் கடுமையான காலத்தில், உரிமைகளை மீட்கவும் நலன்களை காக்கவும் முன்னெப்போதையும்விட அதிகமாகத் கருணாநிதி தேவைப்படுகிறார். நிரந்தர ஓய்வெடுக்கும் அந்த ஓய்வறியாச் சூரியன்தான் இப்போதும் நமக்கு ஒளியாகத் திகழ்கிறது.

இப்போதும் கருணாநிதி தான் நம்மை வழிநடத்துகிறார். அவருடைய பேராற்றலில் ஒருசில துளிகளை நாம் பெற்றாலும் போதும். வேறு ஆற்றல் ஏதுமின்றி களம் காண முடியும். நோய்த் தொற்றுக் காலத்தில் உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்வதுபோல, இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பாற்றல் தான் கருணாநிதி எனும் மகத்தான ஆற்றல்.

கருணாநிதியின் பெருங்கடல் போன்ற பேராற்றலில் உங்களில் ஒருவனான நானும், தொண்டர்களாகிய நீங்களும் சிறுமலை துளிகள் ஒன்றாக சேர்ந்தால் எப்படி வெள்ளமாக மாறுகின்றதோ அது போன்று தமிழக மக்களும் ஒன்றாக சேர்ந்து பெரும் ஆற்றலாக மாற இதயத்தை விட்டு அகலாத தலைவரின் ஆற்றலையும் கொண்டு, சாதனை படைப்போம். கருணாநிதி படைத்த சாதனைகளை அவர்களிடம் சொல்வோம். ஜனநாயகத்தைப் பலிகொடுக்கும் சக்திகளை மக்களிடம் அடையாளம் காட்டுவோம்.

நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்கிடுவோம். தேர்தல் களத்தில் அந்த வெற்றியை உறுதிப்படுத்தி அதனை, கருணாநிதி ஓய்விடத்தில், அவருடைய திருவடிகளில் காணிக்கையாக்குவோம். அதுவரை ஓயாமல் உழைப்பதே, அந்த ஓய்வறியாச் சூரியனுக்கு நாம் செலுத்தும் உகந்த நினைவேந்தலாகும்.என்று தனது தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் உருக்கமான பதிவை வெளியிட்டு முத்தமிழறிஞர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூர்ந்துள்ளார்.

author avatar
Pavithra