தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா..?? ஆலோசனை முடிவில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு! வெளியான முக்கிய தகவல்கள்!

0
68

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இறுதிக்கட்ட முடிவினை பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
‘தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினால் கோவிட் – 19 நோய்த் தொற்று படிப்படியாகத் தமிழகத்தில் குறைந்து வரும் சூழ்நிலையில், பெற்றோர்களும், கல்வியாளர்களும் தமிழகத்தில் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு நடைபெறும் உயர் வகுப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளிகளை விரைவில் திறந்திட தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பள்ளிகளைத் திறப்பது குறித்து மத்திய அரசு, 30.9.2020 அன்று வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15.10.2020-க்குப் பிறகு சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளை மாநில அரசுகள் படிப்படியாகத் திறக்க அனுமதித்துள்ளது.

எனினும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் தொற்றுநோய் சிறப்பு வல்லுநர் குழுவுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறந்திடலாம் எனத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

மேலும், வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் விடுமுறைகள் வருவதைக் கருத்தில் கொண்டும், மாணவர்கள் பாடங்களை முழுவதுமாகக் கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவோ அல்லது இணையவழி வாயிலாகவோ கற்பது அவர்களுக்கு முழுமையான நிறைவினை அளிக்காது என்பதையும் ஆசிரியர்கள் மூலமாக நேரடியாக வகுப்பறையில் கற்பதன் மூலமாகத்தான் மாணவர்கள் எளிதாகப் பாடங்களைப் புரிந்துகொண்டு கற்பதற்கும், தேர்வினை எதிர்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி அந்தந்தப் பள்ளி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து பள்ளிகளைத் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே மாநிலத்தின் வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாகப் பள்ளிகள் திறப்பு குறித்து சில கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து ஏற்கெனவே பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துகள் அரசால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இருந்த போதிலும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்தந்த அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் – ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துகளைப் பெற்றிட ஏதுவாக வருகின்ற நவம்பர் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், கோவிட் – 19 முன்னெச்சரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது .

இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில், 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்தப் பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K