பள்ளிகள் திறக்கப்படுமா..?? தொடங்கியது கருத்து கேட்பு கூட்டம்!

0
90

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் தொடங்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் நவம்பர் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வரும் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா..?? என்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும். அதன் பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி தமிழகத்தில் இன்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் கேள்விகள் அச்சிடப்பட்ட காகிதங்கள் மூலம் பெற்றோர்களிடமிருந்து கருத்து கேட்கப்படுகிறது. தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா..?? திறக்க வேண்டாமா..?? திறக்க வேண்டாம் என்றால் என்ன காரணம்..?? போன்ற கேள்விகள் அச்சிடப்பட்ட காகிதங்களை 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் கொடுத்து, அவர்களிடமிருந்தும் கருத்து கேட்கப்படுகிறது. மேலும் கூட்டத்தில் பங்கேற்க முடியாத பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பு குறித்து, கடிதம் மூலம் தங்களின் முடிவை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K