உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டு செ.கு.தமிழரசன் வழக்கு

0
70

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டு செ.கு.தமிழரசன் வழக்கு

உள்ளாட்சி அமைப்புக்களில் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் துணை மேயர், துணைத் தலைவர் போன்ற பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 33 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 388 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் என, 13,870 பதவிகள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இதுதவிர, உள்ளாட்சி அமைப்புக்களில் பல்வேறு நிலைக் குழுக்களும் உள்ளன. இக்குழுக்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், நான்கு மாநகராட்சிகளில் துணை மேயர், 46 நகராட்சிகளில் துணைத் தலைவர், 168 பேரூராட்சிகளில் துணைத் தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்தில் ஒரு துணைத் தலைவர், 3,786 கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிகள் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு கிடைக்கும் எனக் கூறியுள்ள அவர், துணைமேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி அரசுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளின் துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி கொண்ட அமர்வு, தமிழக தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 7 ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

author avatar
Parthipan K