சசிகலா முன்னெடுக்கும் அரசியல் சுற்றுப்பயணம்! அதிமுகவை கைப்பற்றும் நோக்கத்துடன் வீறுநடை!

0
74

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னால் அதிமுகவின் முக்கிய தலைவர்களை வைத்து தன்னைத்தானே அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று அறிவித்துக் கொண்டார். அதன் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ள இருந்த சமயத்தில் அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக நியமனம் செய்து விட்டு சென்றார். தனக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவர் முதலமைச்சராக தேர்ந்தெடுத்து விட்டுச் சென்றதற்கு காரணம் தான் எப்போது வந்து கேட்டாலும் முதலமைச்சர் பதவியை தனக்காக விட்டு தருவார் என்று நினைத்து தான் அவர் அவ்வாறு ஒரு காரியத்தை செய்தார்.

ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற இந்த நான்கு ஆண்டு காலத்தில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப் போனது. இந்த நான்காண்டு கால ஆட்சியின்போது எடப்பாடி பழனிச்சாமி கட்சியையும், அந்த கட்சியின் முக்கிய தலைவர்களையும், மெல்ல , மெல்ல, தன்வசப்படுத்திக் கொண்டார்.

இதனால் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார். ஆகவே வெளியே வந்தவுடன் அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

ஆனால் அவருடைய இந்த அறிவிப்பிற்கு அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தார்கள், இந்தநிலையில், என்னதான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை சசிகலா முன்னெடுத்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுகவின் கொடியுடன் சசிகலா தன்னுடைய சென்னை இல்லத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் முன்னதாக சென்னை தி நகரில் இருக்கக்கூடிய தன்னுடைய இல்லத்தில் தொண்டர்கள் ஆரத்தி எடுத்து, பூசணிக்காய் உடைத்து, வழியனுப்பி வைத்தார்கள்.அதிமுகவை கைப்பற்றும் நோக்கத்துடன் அந்தக் கட்சியின் தலைமை மீது அதிருப்த்தியில் இருக்கக்கூடிய தொண்டர்களை சந்திப்பதற்காக, தொண்டர்கள் மத்தியில் தனக்கு இருக்கக்கூடிய செல்வாக்கை நிரூபித்துக் காட்டவும், ஒரு வார கால அரசியல் சுற்றுப் பயணத்திற்கு சசிகலா திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அவர் திட்டமிட்டபடி இன்று காலை சென்னையில் தி நகரில் இருந்து காரில் தஞ்சாவூர் கிளம்பினார். நாளை தஞ்சையில் நடைபெறும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதனை அடுத்து வரும் 28-ஆம் தேதி மதுரை செல்லும் சசிகலா அங்கே முத்துராமலிங்கம் மற்றும் மருதுசகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார். அதன் பிறகு தன்னுடைய ஆதரவாளர்களை சந்திக்க இருக்கிறார். இதனை அடுத்து மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஆதரவாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. எதிர்வரும் 29ஆம் தேதி இராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்கும் சசிகலா வரும் 30ஆம் தேதி காலை பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்க இருக்கிறார். அதன்பிறகு ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார் என தெரிகிறது.

பிறகு அன்றே தஞ்சாவூர் திரும்பும் அவர் வரும் 1ஆம் தேதி தஞ்சாவூரில் நடக்கும் நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்துரையாட இருக்கிறார். அதன்பின்னர் தென்மாவட்டங்களில் நெல்லை உள்ளிட்ட மேலும் ஒரு சில மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவில் சசிகலாவை இணைப்பது தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வரக் கூடிய சூழ்நிலையில், சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.