சசிகலா விடுதலை! கொரோனாவில் இருந்தும் விடுபடுகிறார் சசிகலா!

0
88

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்ட சசிகலா கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், நாளைய தினம் ஜனவரி மாதம் 27ஆம் தேதி அவர் விடுதலையாக இருப்பதாக பெங்களூர் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

இருந்தாலும் சென்ற 20ஆம் தேதியன்று சிறையிலிருந்த சசிகலாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு அதன் காரணமாக, சிறை வளாகத்திற்கு அருகே இருக்கக்கூடிய பெங்களூரு போரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா உறுதியானது. அதன் காரணமாக மேல்சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு சசிகலாவிற்கு உடலில் நிமோனியா காய்ச்சல் , மற்றும் கொரோனாவும், இணைந்துகொள்ள அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. இதன்காரணமாக சசிகலாவை மருத்துவர்கள் மிக தீவிரமாக கண்காணித்து வந்தார்கள். அதோடு சசிகலாவின் உறவினர்கள் மிகவும் கவலையில் இருந்து வந்தார்கள். தொடர்ச்சியான சிகிச்சை மூலமாக சசிகலா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றார் என்று அந்த மருத்துவமனை நேற்றையதினம் தெரிவித்திருந்தது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்றையதினம் தன்னுடைய வலைதளப் பக்கத்தில், அனைவரும் எதிர்பார்த்தபடி தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் அதாவது 27ஆம் தேதி அன்று சிறையிலிருந்து விடுதலை ஆகிறார். கொரோனாவால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பானது தற்பொழுது வெகுவாக குறைந்து இருக்கின்ற நிலையில், அவருக்கு உடல்நிலை சீராகி வரும் காரணத்தால், மருத்துவருடைய ஆலோசனை படி பெங்களூரு மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் தேதி என்ன என்று பிறகு தெரிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

ஆகவே ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா அதிகாரப்பூர்வமாக விடுதலையாக இருக்கிறார். அதன்பின்பு கொரோனாவில் இருந்து அவர் முற்றிலுமாக விடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநில காவல்துறையினர் பெங்களூருவில் சசிகலாவிற்கு வரவேற்பு ஏற்பாடுகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருப்பதால், கர்நாடக, மற்றும் தமிழக எல்லையில் இருந்து சசிகலாவிற்கு வரவேற்பு அளிப்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் காத்திருப்பதாக சொல்கிறார்கள்.