சசிகலா விடுதலையாவது தொடர்பாக கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்! மகிழ்ச்சியில் சசிகலா தரப்பு!

0
72

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை செய்வது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்திருக்கிறது என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது இருந்த சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றம் சென்ற 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் நான்கு வருடங்கள் சிறை தண்டனை அளித்தது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர்கள் மூவரும் அடைக்கப்பட்டன. சென்ற நான்கு வருட காலமாக சிறையில் இருக்கின்ற இவர்களுடைய தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் நிறைவு பெறுகிறது.

இந்த சூழலில், உச்சநீதிமன்றத்தால் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையாக 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயை பெங்களூரில் இருக்கின்ற தனி நீதிமன்றத்தில் சென்ற வருடம் நவம்பர் மாதம் சசிகலாவின் வழக்கறிஞர் செலுத்தினார். ஆகவே இந்த மாதம் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது . இருந்தாலும் அதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில்தான் இந்த மாதம் 27ஆம் தேதி சசிகலா தண்டனை முடிந்து வெளியே வருவது தொடர்பாக அதிகாரபூர்வமான தகவல் கிடைத்திருக்கிறது என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து தண்டனை முடிந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஓசூர், ஜூஜூவாடி, போன்ற இடங்களில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. சசிகலா விடுதலை ஆகும் அதே தினத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க இருக்கிறார் அதோடு அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் அதே நாளில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதுதான். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் தமிழகத்தில் இருக்கின்ற சில முக்கிய அமைச்சர்கள் சசிகலா பக்கம் சென்று விடலாம் என்ற தகவல்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்திருக்கின்றது. இதன் காரணமாக அவ்வப்பொழுது அதிமுகவில் சசிகலாவிற்கு ஆதரவான குரல்களும் எழுந்து வந்திருக்கின்றன. இதையெல்லாம் பார்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கண்டித்தும் இருக்கிறார்.

சசிகலா வெளியே வரும் சமயத்தில், கட்சிக்குள் சசிகலாவிற்கு ஆதரவான குரல்கள் எழுப்பப்பட்ட நிலையில்தான் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உதவியை நாடி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு விரைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதோடு எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டதிலும் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பது முதல்வரை யோசிக்க வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

இதுவரையில், அனைத்தையும் அச்சுப் பிசகாமல் திறமையாக கையாண்ட முதலமைச்சர் இதுபோன்ற ஒரு சிக்கலான சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்று தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் நோக்கர்கள் முதல்வரை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்து இருக்கிறார்களாம்.