அட ரெண்டு பேரும் சண்டை போடாதீங்கப்பா !ஓபிஎஸ் இபிஎஸ்-க்கு திடீர் அறிவுரை வழங்கிய சசிகலா!

0
72

தேவர் ஜெயந்தி விழாவிற்கு அதிமுக சார்பாக வழங்கப்படும் தங்க கவசத்தில் எந்த விதமான இடையூறும் இல்லாமல் அதிமுகவினர் செயல்பட வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தி உள்ளார் .இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். அவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் வாழ்ந்தவர்.

ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்வு வளம் பெற போராடியவர். தமிழக மக்களின் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அன்று ஒவ்வொரு வருடமும் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அப்படி கொண்டாடப்படும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றுக் கொண்டு தேவர் திருமகனாருக்கு மலர் அஞ்சலி செலுத்துவதற்காக புரட்சித்தலைவி அம்மாவும் நானும் கடந்த 2010 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்று இருந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

அந்த சமயத்தில் எங்களிடம் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க ஆவண செய்ய வேண்டும் என்று அங்கே கூடியிருந்த மக்களும் கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகளும் வேண்டுகோள் விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து தேவர் திருமகனாரின் திருவருவுச்சிலைக்கு 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை கழகத்தின் சார்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2014ஆம் வருடம் வழங்கினார்.

அன்று முதல் ஒவ்வொரு வருடமும் தேவர் ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் ஐயா முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது.

தேவர் திருமகனாருக்கு வழங்கிய தங்க கவசத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் இருக்கின்ற வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்து தேவர் ஜெயந்தி விழாவின் போது எடுத்து அணிவிக்கப்படுகிறது.

இது ஒரு வழக்கமான நடைமுறைதான் இது புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வழங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டுள்ளது இதில் எப்போதும் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். முக்கிய பொறுப்பு நம்முடைய கட்சிக்கு தான் இருக்கிறது.

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போக மாட்டார்கள் என்பதை கழகத்தினர் அனைவரும் மனதில் வைத்து தொடர்ந்து மேற்கொண்டு வரும் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி சமூக நீதிக்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணம் செய்த தேவர் திருமகனாருக்கு தங்க கவசம் அணிவித்து எதிர்வரும் தேவர் ஜெயந்தி விழாவை எல்லோரும் சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சசிகலா.