திமுகவில் சொந்த கட்சி எம்பியே புறக்கணிக்கப்படும் அவலம்! ட்விட்டரில் கொந்தளித்த எம்பி 

0
83
SR Parthipan - சேலம் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன்
SR Parthipan - சேலம் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன்

திமுகவில் சொந்த கட்சி எம்பியே புறக்கணிக்கப்படும் அவலம்! ட்விட்டரில் கொந்தளித்த எம்பி

SR பார்த்திபன் – SR Parthipan

சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மற்றும் சூரமங்கலம் உள்ளிட்ட மண்டலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாநகராட்சி கமிஷனர் கிருஸ்துராஜ் தலைமையேற்று நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் 994 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 1166 சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 2160 நபர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மேயர், துணை மேயர் மற்றும் திமுக எம்எல்ஏ உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு சேலம் திமுக எம்பியான எஸ்.ஆர்.பார்த்திபன் அழைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தியை தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த வகையில் எஸ்.ஆர்.பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;

1. ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நான் ஒரு எம்பி. மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது சட்ட விரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ எதிர்கட்சி எம்.பி என்று நினைக்கிறார் போலும் !

https://twitter.com/SR_Parthiban/status/1563051767835033606?cxt=HHwWjIDUtaXTibErAAAA

2. மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார்.என்னை புறக்கணிப்பது, எனக்கு வாக்களித்து 20 இலட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமம். நான் போராட்டக்காரன் என்பதனை அனைவரும் அறிந்த ஒன்று ! இதை சம்மந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் !!

https://twitter.com/SR_Parthiban/status/1563051774113886211?cxt=HHwWhsDRmdTTibErAAAA

3. சுயமரியாதை என் உயிருக்கு மேலானது‌. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பிக்கு அழைப்பு கொடுக்க கூடாது. அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால், அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் என அவர் விரக்தியுடன் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/SR_Parthiban/status/1563052923365752832?cxt=HHwWgIDQ5caWirErAAAA

ஆனால் இதுகுறித்து சேலம் அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இந்த நிகழ்ச்சி அரசு விழாவே கிடையாது என்று சமாளிக்கின்றனர். சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சிக்கான விருது பெற்றதற்காக, சேலம் மேயரின் சார்பில் தனது சொந்த பணத்தில் இந்த விழா நடத்தப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் எம்பி புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல எனவும் தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியானது மாநகராட்சி ஆணையரின் தலைமையில் நடக்கப்படவில்லை. அவர் இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சியின் கமிஷனர் என்ற அடிப்படையில் மட்டுமே பங்கேற்றதாக சமாளிக்கின்றனர்.

அதே நேரத்தில் அரசு நிகழ்ச்சியாக இல்லாமல் இருக்கும் போது திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ  மற்றும் மேயர் உள்ளிட்டோர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போது எம்பியை மட்டும் ஏன் அழைக்கவில்லை எனவும் அவருடைய ஆதரவாளர்கள் சந்தேகத்தை கிளப்புகின்றனர்.

ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வியை அடைந்தது. இந்நிலையில் ஆளும்கட்சியை சேர்ந்த எம்.பி ஒருவரே அரசு விழாக்களில் தான் புறக்கணிக்கப்படுபவதாக குற்றம்சாட்டுவது சேலம் மாவட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் முக்கிய நபராக விளங்கிய மறைந்த வீரபாண்டியார் காலத்திலிருந்தே திமுகவில் இங்கு பல்வேறு உட்கட்சி குழப்பங்கள் நிலவி வருகின்றது.இனியாவது தலைமை கவனித்து இதை சரி செய்யுமா? என உடன்பிறப்புகள் புலம்பி வருகின்றனர்.