சபரிமலையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு! தீர்ப்பு என்ன சொல்கிறது??!

0
127
sabarimala judgement-News4 Tamil Latest Online Tamil News Today
sabarimala judgement-News4 Tamil Latest Online Tamil News Today

சபரிமலையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு! தீர்ப்பு என்ன சொல்கிறது??!

அயோத்தி வழக்கு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வெளியான நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான அமர்வு அடுத்து  சபரிமலை உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளில் நவம்பர் 17 ஆம் தேதிக்கு முன்பு தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள வெளியாகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்து.

இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சபரி மலையின் நம்பிக்கையில் தலையிடும் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட் மனுவை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த வெள்ளிக் கிழமைக்குள் எப்போது வேண்டும் என்றாலும் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக பிரச்சினையில் உள்ள தற்போது தீர்ப்பு வெளியான அயோத்தி விவகாரம் போலவே சபரிமலை பிரச்சனையில் பாஜக முக்கிய இடம் பெறுகிறது. ஏனெனில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதை எதிர்த்து கடந்த ஆண்டு பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதனால் சபரிமலையில் கடந்த ஆண்டு சீசனில் தொடர் போராட்ட களமாக இருந்தது.

சிவன் மற்றும் விஷ்ணுவின் பெண் அவதாரம் மோகினி ஆகியோரின் மகனாகக் கருதப்படும் சபரிமலையில் உள்ள அய்யப்பன் சுவாமியை பல்வேறு மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். அய்யப்பன் சுவாமியின் பிரம்மச்சாரியம் காரணமாக மாதவிடாய் காரணமாக வயதுக்கு வந்த பெண்களை கோவிலின் வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்பது பக்தர்களின் பல ஆண்டுகள் நம்பிக்கை ஆகும். சிறு வயது பெண் குழந்தைகள் அல்லது முதியோர்களுக்கு அனுமதி உண்டு.

அய்யப்ப பக்தர்களின் இந்த நம்பிக்கைக்கு 1991 ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரி மலைக்குள் நுழைவதைத் தடை செய்ததால் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது.

இந்நிலையில் காலங்காலமாக பின்பற்றி வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த 6 பெண் வழக்கறிஞர்கள், பெண்களுக்கு சபரிமலையில் விதித்த தடையை எதிர்த்து 2006 ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தனர். இது இந்திய அரசியலமைப்பின் விதிகளையும் சாரத்தையும் மீறுவதாக தங்கள் மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

இதனையடுத்து உச்சநீதிமன்றம், கடந்த 2018 ஆண்டு செப்டம்பர் மாதம், 1991 ஆம் ஆண்டில் கேரளா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றி அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்தது.

அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொது மக்களின் நம்பிக்கைக்கு எதிரான இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக, பெண்களை நுழைய விடாமல் சபரிமலையில் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது. இந்நிலையில் மக்களின் எதிர்ப்பால் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்னும் சில நாட்களில் தீர்ப்பு அளிக்க உள்ளது.

மேலும் சபரிமலை சீசன் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்பு எதுவாக இருந்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. பெண்களை அனுமதித்தாலும் அனுமதிக்கவில்லை என்றாலும் இந்த வருடமும் சர்ச்சைக்களுக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16 ஆம் தேதி திறக்கப்பட்டு 17 ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து சபரிமலை கோயிலுக்கு கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டல பூஜை காலத்தில் 23 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பக்தர்களின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.