இந்திய மாணவர்களுக்கு ரஷியா அழைப்பு!

0
107

இந்திய மாணவர்களுக்கு ரஷியா அழைப்பு!

உக்ரைன், ரஷியா இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. படிப்புக்காக இந்திய மாணவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைன் சென்று பயின்று வந்தனர். இதனிடையே உக்ரைன், ரஷியா இடையேயான போரில் இந்திய மாணவர்கள் உள்பட இந்தியர்கள் பலர் உக்ரைனில் சிக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு ஆபரேஷன் கங்கா நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்கள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் மத்திய அரசு மீட்டு இந்தியா அழைத்து வந்தது.

இதனையடுத்து மாணவர்களின் மருத்துவபடிப்பு குறித்த எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில் உக்ரைன் பல்கலைக்கழகத்தில் இருந்து நாடு திரும்பும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு ரஷிய பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. கூடுதல் கட்டணம் இல்லாமலும், நுழைவு தேர்வு இல்லாமலும் மாணவர்கள் ரஷிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள் நடப்பாண்டிற்கான கட்டணம் செலுத்த தேவையில்லை என்று கூறியுள்ளது. மேலும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தடையின்றி படிப்பை  தொடர ஏதுவாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படாது என்றும் ரஷ்ய பல்கலைகழகங்கள் உறுதியளித்துள்ளன.

ரஷியா மற்றும் கிரிமியாவில் உள்ள நிறுவனங்கள் உக்ரைனில் இருந்த வெளிநாட்டு மருத்துவ ஆர்வலர்களையும், இந்தியாவை தளமாக கொண்ட ஆலோசகர்களையும் அணுகி தங்களது கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வழங்கும் பணியை ஏற்கனவே தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K