தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள விதிமுறைகள்! உடனடியாக அமைக்கப்பட்ட பறக்கும் படைகள்!!

0
63

தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள விதிமுறைகள்! உடனடியாக அமைக்கப்பட்ட பறக்கும் படைகள்!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார்.

தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றின் தீவிரத்தை காரணம் காட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலை தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணையம் தான் அதை முடிவு செய்ய வேண்டும் என கூறி உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அதன் ஒருபகுதியாக பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யும் போது வீடியோ எடுத்து உடனுக்குடன் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வியாபாரிகளிடமிருந்து பணம் பறிமுதல் செய்தால் உரிய ஆவணம் சமர்பித்த பிறகு திருப்பி தரப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K