ருத்ர தாண்டவம் திரைப்பட விமர்சனம் – PCR சட்டத்தை சுயநலத்திற்காக பயன்படுத்தியவர்களுக்கு தரமான சவுக்கடி

0
158
rudra thandavam 2021 movie review in tamil
rudra thandavam 2021 movie review in tamil

ருத்ர தாண்டவம் திரைப்பட விமர்சனம் – PCR சட்டத்தை சுயநலத்திற்காக பயன்படுத்தியவர்களுக்கு தரமான சவுக்கடி

பழைய வண்ணாரபேட்டை மற்றும் திரௌபதி திரைப்படத்தை தொடர்ந்து மோகன் ஜி அவர்களின் இயக்கத்தில் வெளியானது தான் ருத்ர தாண்டவம் திரைப்படம்.நாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரௌபதி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான போது தமிழ் திரையுலகிலும்,தமிழக அரசியலிலும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் திரையில் பலரும் சொல்ல தயங்கிய இந்த நாடக காதல் மற்றும் அதை வைத்து அரசியல்வாதிகள் நடத்தும் கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பிரச்சனைகளை இந்த திரௌபதி திரைப்படம் வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.அதைப்போலவே ருத்ர தாண்டவம் திரைப்படமும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதை பழக்கம் அதனால் அவர்களின் குடும்பத்திலும்,சமுதாயத்திலும் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ளது.

திரௌபதியை தொடர்ந்து ருத்ர தாண்டவம் திரைப்படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் பிரபல இயக்குனர் கௌதம் மேனன்,ராதாரவி,தம்பி ராமையா,மாளவிகா அவினாஷ், ஒய்.ஜி. மகேந்திரன், மனோபாலா, ஜி மாரிமுத்து, தீபா மற்றும் காக்காமுட்டை விக்னேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஜுபின் இசையமைக்க,ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ருத்ர தாண்டவம் விமர்சனம்
ருத்ர தாண்டவம் விமர்சனம்

தருமபுரியை சேர்ந்தவரான ருத்ர பிரபாகரன் (ரிச்சர்ட்) சென்னையில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றுகிறார்.நேர்மையான அதிகாரியாக பணியாற்றும் இவரை மேலதிகாரி சென்னை துறைமுகம் பகுதியில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை கண்டு பிடிக்கும் பணிக்காக அங்கு இடமாற்றம் செய்கிறார்.அந்த சமயத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கிய சிறுவன் மரணமடைகிறார்.

இந்த மரணத்திற்கு ஆய்வாளர் ருத்ர பிரபாகரன் தான் காரணம் என குற்றசாட்டு எழுகிறது.இதன் காரணமாக அவர் பணியிடை நீக்கம் செய்யபடுகிறார்.இதனையடுத்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளிவந்து தன்னை எப்படி குற்றமற்றவர் என்று நிரூபிக்கிறார்,இவரை எதிரிகள் எந்த மாதிரியான சூழ்ச்சிகளில் சிக்க வைக்கின்றனர் என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் முதல்பாதி வழக்கமான படங்களில் வரும் நேர்மையான காவல்துறை அதிகாரிக்கான காட்சிகளாக அமைந்தாலும் சமுதாயத்துக்கு தேவையான பல கருத்துக்களை இயக்குனர் நுழைத்துள்ளார்.இதில் பெண்கள் போதைக்கு அடிமையாகுவதால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை, இளவயது திருமணம்,அதைவைத்து அரசியல்வாதிகள் நடத்தும் கட்டபஞ்சாயத்து உள்ளிட்ட பிரச்சனைகள்,படிக்கும் மாணவர்கள் போதைக்கும்,ஆன்லைன் விளையாட்டிற்கும் அடிமையாகுவதால் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை காட்டியுள்ளார்.

இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகளில் பட்டியலின மக்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட PCR சட்டத்தை எதிரிகள் எப்படி ஒருவரை பழி வாங்க பயன்படுத்துகின்றனர்,மதம் மாறினால் சாதியை பயன்படுத்த முடியாது, அவர்களுக்கு PCR சட்டம் செல்லாது என்ற தகவல் என பலரும் திரையில் காட்ட தயங்கிய சம்பவங்களை இயக்குனர் தைரியமாக காட்டியுள்ளார்.அம்பேத்காரை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் சொந்தமில்லை என்றும் அவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமான தலைவர் என அவரை வைத்து அரசியல் செய்யும் தலைவர்களுக்கு தரமான பதிலை அளித்துள்ளார்.

ருத்ர தாண்டவம் விமர்சனம்
ருத்ர தாண்டவம் விமர்சனம்

திரௌபதி படம் எடுக்கப்பட்ட விதம் சரியில்லை என கூறியவர்களுக்கு ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் மூலம் பட்ஜெட் இருந்தால் அதற்கேற்றவாறு தரமும் இருக்கும் என இயக்குனர் நிரூபித்துள்ளார்.நேர்மையான அதிகாரியாக வரும் ரிச்சர்ட் மிடுக்கான நடிப்பால் அசத்தியுள்ளார்.இவரது மனைவியாக வரும் தர்ஷா குப்தா கிராமத்து பெண்ணாக தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.வில்லனாக வரும் கௌதம் மேனன் தனக்கேயுரிய பாணியில் மிரட்டியுள்ளார்.ஒரு சில இடங்களில் அவருக்கான வசனங்களில் வேகம் குறைந்தாலும் மற்ற இடங்களில் தரமான நடிப்பை வழங்கியுள்ளார்.

ரைட்டராக வரும் தம்பி ராமையா,வழக்கறிஞராக வரும் ராதாரவி,நீதிபதியாக மாளவிகா அவினாஷ்,சிறுவனின் அம்மாவாக தீபா என ஒவ்வொருவரும் தங்களுடைய கேரக்டரில் நடித்தார்கள் என்பதை விட வாழ்ந்துள்ளார்கள் என்றே கூற முடியும்.அந்த அளவிற்கு அனைவரும் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர்.நீதிமன்ற காட்சிகளில் வரும் பெரும்பாலான வசனங்கள் அனைத்திற்கும் கைதட்டல் மற்றும் விசில் பறக்கிறது.

படம் வெளியாவதற்கு முன்பே இது குறிப்பிட்ட சாதி மற்றும் மதத்திற்கு எதிரானது என சர்ச்சைகள் கிளம்பியது.ஆனால் படம் முழுவதும் எந்த இடத்திலும் ஒரு தனிப்பட்ட மதத்தையோ,சாதியையோ இழிவுபடுத்தாமல் நடந்த சம்பவங்களை மட்டுமே காட்டி நேர்த்தியாக காட்சியை அமைத்துள்ளார் இயக்குனர்.

சில நேரங்களில் படத்தின் அதீத பின்னணி இசை டையலாக்கை கேட்க முடியாத அளவிற்கு உள்ளது படத்தின் மைனஸ்.மிரட்டும் வகையில் கௌதம் மேனன் பேசும் சில வசனங்கள் சாதரணமாக அமைந்துள்ளது.ஒரு சாராரை திருப்திபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டது போல தெரிந்தாலும் கர்ணன் போன்ற படங்களும் இதே போல ஒருதரப்பு நியாயத்தை மட்டுமே பேசுவதாக எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்தாள நினைப்பவர்கள் மத்தியில் அவர்களை ஒன்றிணைந்து வாழ வைக்க பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ள இயக்குனரை பாராட்டலாம்.எந்தவித ஆபாசம் மற்றும் கவர்ச்சியும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் அளவிற்கு படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

author avatar
Ammasi Manickam