மாமூல் கேட்ட ரவுடிக்கு மாவுக்கட்டு போட்ட காவல்துறை; விழுப்புரத்தில் விதி விளையாடியது!

0
79

மாமூல் கேட்ட ரவுடிக்கு மாவுக்கட்டு போட்ட காவல்துறை; விழுப்புரத்தில் விதி விளையாடியது!

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிக்கு கால் உடைந்து மாவுக்கட்டு போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நீண்ட நாட்களாக மாமூல் கைவரிசையை காட்டிவந்த ரவுடி உதயன் என்பவன், கத்தியை காட்டி வியாபாரிகளிடம் பண வசூல் வழக்கில் தேடப்பட்டவன். இன்று ரவுடி உதயன் இருக்கும் இடம் போலீசாருக்கு ரகசிய தகவலின் மூலம் தெரிய வர ரவுடியை தேடி காவல்துறை தனிப்படை முடுக்கிவிடப்பட்டது.

விழுப்புரம் குயிலாப்பாளையத்தை சேர்ந்த மாமூல் ரவுடி சில நாட்களுக்கு முன்பு, ஒரு வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பண வசூல் கேட்டதாகவும், பணம் தர மறுத்ததால் கடை உரிமையாளரின் வாகன கண்ணாடியை உடைத்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாட்டுக்காரன் சாவடி அருகே நீர்தேக்க தொட்டியின் மேலே மறைந்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததை அடுத்து, நீர் தேக்கத் தொட்டியை நெருங்கிய காவல்துறை ரவுடி மேலே இருப்பதை உறுதி செய்து கொண்டு இரும்பு படிக்கட்டின் வழியாக மேலே ஏறினர்.

போலீசார் தன்னை பிடிக்க வருவதை அறிந்து கொண்ட ரவுடி என்ன செய்வதென்று தெரியாமல் திடீரென நீர்தேக்க தொட்டியின் மேலிருந்து கீழே குதித்தான். இதனால் அவனது காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. ரவுடியின் பரிதாப நிலையை பார்த்த காவல் துறையினர் பொறுப்புடன் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து மாவுக்கட்டு போட்டனர். மாமூல் ரவுடி உதயனிடம் இருந்து சில ஆயுதமும் அவனுடைய இருசக்கர வாகனத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர். சமீப காலங்களாக சமூகத்தில் தவறு செய்யும் பலர் பாத்ரூமில் வழுக்கிவிழுந்து மாவுக்கட்டு போடுவது வழக்கமாகி வருகிறது.

author avatar
Jayachandiran