நானும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே இடத்துக்கு மோதுகிறோமா?… ரிஷப் பண்ட்டின் வெளிப்படை பேச்சு

0
66

நானும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே இடத்துக்கு மோதுகிறோமா?… ரிஷப் பண்ட்டின் வெளிப்படை பேச்சு

இந்திய அணியில் இப்போது தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் என இரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்.

2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் சில போட்டிகள் விளையாடுவதும் பின்னர் நீக்கப்படுவதும் என இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக கூட செயல்பட்டார்.

2022 ஆம் ஆண்டில் ஒரு ஐபிஎல் தொடரின் மூலமாக, தினேஷ் கார்த்திக் அற்புதமான திருப்புமுனையைப் பெற்றுள்ளார். RCB அணிக்காக பின் வரிசையில் சிறப்பான பேட்டிங் செய்ததன் மூலம் மீண்டும் தேசிய அணிக்கு திரும்பினார். இதையடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி டி 20 போட்டிகளில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். இதையடுத்து தினேஷ் கார்த்திக் தற்போது ஆசியக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். இதில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர்  உலகக்கோப்பை டி 20 அணியிலும் இடம்பெறுவார்.

 ஆனால் அவர் ஆடும் லெவனில் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அவரும் ரிஷப் பண்ட்டும் ஒரு இடத்துக்கு போட்டியில் உள்ளனர். இதுபற்றி பேசியுள்ள பண்ட் “நானும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே இடத்துக்கு போட்டியில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.  நாங்கள் இருவருமே என்ன தேவை என்பதை அறிந்து கொடுப்போம். யாருக்கு வாய்ப்புக் கிடைத்தாலும் பிரச்சனை இல்லை. பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர் கள நிலைமையைப் புரிந்துகொண்டு முடிவெடுப்பார்கள்” என்று கூறியுள்ளார்.