தேர்தல் அலுவலர் சிவகுமாரை நீக்குக!! அதிமுக சிவி சண்முகத்தின் அதிரடி மனு!!

0
112

தேர்தல் அலுவலர் சிவகுமாரை நீக்குக!! அதிமுக சிவி சண்முகத்தின் அதிரடி மனு!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் அலுவலர் சிவக்குமாரை நீக்க வேண்டும்.அதிமுக எம்பி சிவி சண்முகம் தேர்தல் ஆணையத்தில் மனு.

அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த இன்ப துரை ஆகியோர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி சிவி சண்முகம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 2,20,000 பேரில் சுமார் 45000 போலி வாக்காளர்கள் இடம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டினார்.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல வாக்காளர்கள் தொகுதியில் வசிக்கவே இல்லை என குற்றம் சாட்டிய சிவி சண்முகம் இறந்து போன நபர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பல இடங்களில் ஒரே வாக்காளரின் பெயர் இரண்டு முறை இடம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் தற்போதைய இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவகுமார் திமுக அரசுடன் இணைந்து முறைகேடான வாக்காளர் பட்டியலை தயாரித்திருப்பதாக குற்றம் சாட்டியவர் இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு அளித்ததாக குறிப்பிட்டார்.

எனவே வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் எனவும், போலி வாக்காளர்களை களையெடுத்து முறையான புதிய வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியவர் தேர்தல் முறையாக நடைபெற மத்திய காவல் படையின் பாதுகாப்புடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் திமுக அரசுக்கு உடந்தையாக செயல்படும் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரை நீக்கிவிட்டு நேர்மையாக சுதந்திரமாக செயல்படும் வேறு ஒரு தேர்தல் அதிகாரி நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவை எதிர்கொள்ள அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தேர்தலில் தாங்கள்தான் போட்டியிட வேண்டும் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளரை அறிவித்திருக்கிறார் எனவும் அதிமுக யாருக்காகவும் காத்திருக்காது என தெரிவித்தார்.