நாட்டில் உள்ள கட்சிகளின் சொத்து மதிப்பின் விவரங்கள் வெளியீடு!

0
66

நாட்டில் உள்ள கட்சிகளின் சொத்து மதிப்பின் விவரங்கள் வெளியீடு!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆண்டுதோறும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெற்ற நன்கொடை, அவற்றின் சொத்து உள்ளிட்ட தகவல்களை வெளியிடும். அதன்படி, 2019-20ம் நிதியாண்டிற்கான தேசிய மற்றும் மாநில கட்சிகளின் சொத்து விவரம், நிதி குறித்த தகவல்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் ஏழு தேசிய கட்சிகளும் மற்றும் 44 பிராந்திய கட்சிகளும் உள்ளன.

இந்நிலையில் 2019 – 2020ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளில் தேசிய கட்சிகளும் மாநிலத்தில் உள்ள கட்சிகளும் தங்களது சொத்து விவரங்கள் குறித்து வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கைகளை தொகுத்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அடிப்படையில் 2019 – 2020ஆம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு 4,224 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கணப்பு சமர்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பாஜக முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக 698 கோடி ரூபாய் சொத்துக்கள் உடன் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டாவது இடத்திலும், 588 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உடன் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

அதற்கடுத்து தேசிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 569 கோடி ரூபாய் சொத்துக்கள் உடன் நான்காவது இடத்திலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 247 கோடி ரூபாய் மதிப்பில் 5வது இடத்திலும் உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருபத்தி ஒன்பது கோடி ரூபாய் சொத்துக்கள் உடன் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது.

மாநில கட்சிகளில் சமாஜ்வாதி கட்சி 563 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் முதல் இடத்திலும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 301 கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்திலும், அதிமுக 267 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் வைப்பு நிதியுடன் 3வது இடத்திலும் இருக்கின்றன.

author avatar
Parthipan K