பன்னீர்செல்வத்துடன் சமாதானமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி விளக்கம்!

0
53

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் ஜூன் மாதம் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்ட வேண்டும், பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக இருந்து வருவதால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஆகவே அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளருமான ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றை வழங்கினார்.

அந்த சமயத்தில் அவர் பேசியதாவது, கட்சியில் ஒருமித்த கருத்தினடிப்படையில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதிமுகவின் சட்டவிதிகளின்படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து வாதங்களை நீதிமன்றத்தில் சரியான முறையில் முன் வைத்திருக்கிறோம், பன்னீர்செல்வம் தரப்பிலும் வாதங்களை முன் வைத்தார்கள், தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது என்று அவர் கூறினார்.

அதோடு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சனம் செய்வது நன்றாக இருக்காது, தீர்ப்பின் நகல் வந்த பிறகு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நாங்கள் முடிவெடுப்போம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கட்சியில் பன்னீர்செல்வத்திற்கு எந்த விதமான ஆதரவு நிலைப்பாடுமில்லை 95% பேர் ஒருமித்த கருத்துடன் ஒற்றை தலைமையை தற்போது ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அவ்வாறிருக்க சமரசம் ஏற்படுவதற்கு எங்கே வாய்ப்பிருக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தற்போது எதுவும் சொல்ல முடியாது, சட்ட நடவடிக்கையா அல்லது வேறு விதமான நடவடிக்கையா என்பதை கட்சி முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.