தமிழக அமைச்சரவையில் மாற்றமா? ஆளுநருடனான முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன?

0
70
Reason for Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy and Governer Meet-News4 Tamil Latest Online Tamil News Today
Reason for Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy and Governer Meet-News4 Tamil Latest Online Tamil News Today

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? ஆளுநருடனான முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திடீரென்று நேற்று மாலை சென்னை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசிள்ளார். இந்த சந்திப்பின் போது அவரோடு தலைமைச் செயலாளர் சண்முகமும் டிஜிபி திரிபாதியும் இருந்துள்ளனர். நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதிற்கு பிறகு நடைபெறும் இந்த ஆளுநர் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வர இருக்கும் சூழ்நிலையில், தமிழகத்தில் அந்த தீர்ப்பின் எதிரொலியாக அசம்பாவிதங்கள் எதாவது நடந்து விடக்கூடாது என்ற வகையில் மத்திய அரசிடமிருந்து எச்சரிக்கை வந்திருப்பதாகவும்,அதுபற்றி விவாதிக்கவே ஆளுனரை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஆளும் அதிமுக தரப்பு அயோத்தி வழக்கு தீர்ப்பு வருவது பற்றிய விவாதம் என்று கூறினாலும், அரசியல் ஆர்வலர்கள் இதை அதையும் தாண்டிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக தான் பார்க்கிறார்கள். கடந்த காலங்களில் முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா ஆட்சி செய்த போது பல முறை தமிழக அமைச்சரவையை மாற்றி அமைப்பார்.

இதன் மூலமாக அமைச்சர்களும் தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுமாறு பார்த்து கொள்வார். ஆனால் அவரது மறைவிற்கு பிறகு முதல்வரான எடப்பாடி பழனிசாமி தன் தலைமையிலான அரசை காப்பாற்றி கொள்ளவே இவ்வளவு நாட்கள் சென்றுள்ள நிலையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் அவருக்கு ஒரு நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது.

அந்த வகையில் பார்க்கும் போது தமிழக அமைச்சரவையை எடப்பாடி பழனிச்சாமி விரைவில் மாற்றி அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தேர்தல்களில் ஆளும் அதிமுக பெற்ற அமோக வெற்றி மூலம் ஆட்சியின் உறுதித்தன்மை கூடியிருக்கிறது. திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் இந்த ஆட்சி விரைவில் கலைந்து விடும் என்று சில வருடங்களாகவே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் அப்படி எதுவும் நடக்காமல் அதற்கு எதிராக தற்போது பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்களை விட அதிகமாக பெற்று ஆட்சி மேலும் வலிமையானதாக மாறியுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த அமைச்சர் மணிகண்டன் நீக்கத்தை தவிர வேறு எந்த மாற்றத்தையும் பெரிய அளவில் தமிழக அமைச்சரவையில் செய்யாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதன் முறையாக தனது விருப்பப்படி தமிழக அமைச்சரவையை மாற்றியமைக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அதன்படி மதுரையைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா, கொங்கு பகுதியை சேர்ந்த தோப்பு வெங்கடாசலம், தனது சொந்த மாவட்டமான சேலத்தை சேர்ந்த செம்மலை, தென் மாவட்டத்தைச் சேர்ந்த சதன் பிரபாகர் உள்ளிட்ட சிலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. மேலும் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கும் தமிழக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

இது தவிர மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றியமைக்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக வேலுமணி, தங்கமணி, வீரமணி ஆகியோரிடம் பல முக்கியமான துறைகள் இருப்பதால் அவர்களிடம் இருந்து சில துறைகளை பிரித்து பிற அமைச்சர்களுக்கு கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறபடுகிறது. இந்த மூன்று அமைச்சர்களும் தமிழக அமைச்சரவையில் மிக முக்கியமான துறைகளை தங்கள் வசம் வைத்திருக்கும் சூழ்நிலையில் கட்சிக்கென நிதி தரும் விவகாரங்களில் இவர்களுக்கும் முதல்வர் எடப்பாடிக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.

மேலும் சில அமைச்சர்களை நீக்கவும் திட்டம் உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அது போன்ற நடவடிக்கை தேவையா என்ற எச்சரிக்கை உணர்வும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் இருக்கிறது என்கிறார்கள்.

வெளிநாட்டு பயணம் செல்ல திட்டமிட்டுள்ள துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வரும் நவம்பர் 7 ஆம் தேதி மாலை டெல்லி சென்று அங்கிருந்து அமெரிக்கா புறப்படுகிறார். அதற்கு முன் ஆறாம் தேதி அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. துணை முதல்வரின் பயண தேதிக்கு முன்பாகவே தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்து அதற்கான பட்டியலை வெளியிட்டு தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கலாம் என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்கிறார்கள்.

எனவே தமிழக அமைச்சரவை மாற்றம் எந்த நேரமும் நிகழலாம் என்பதே இப்போதைய நிலைமை என்று ஆளும் தரப்பில் எதிர்பார்க்கபடுகிறது. இதன் மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் அமைச்சர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது. இது எந்த அளவிற்கு அவருக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
Ammasi Manickam