மக்களை முட்டாள்களாக்கும் கருத்துக் கணிப்புகள்! இதோ ஆதாரங்கள்!

0
100
Poll
Poll

மக்களை முட்டாள்களாக்கும் கருத்துக் கணிப்புகள்! இதோ ஆதாரங்கள்!

நாடு முழுவதும் தேர்தல் என்று வந்துவிட்டால் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்று ஆளாளுக்கு கிளம்பி விடுகின்றனர். அதிலும் சிலர் பிரபலமான கல்லூரிகளில் படித்ததாலோ அல்லது பணியாற்றியதாலோ, கல்லூரியை அடையாளமாக வைத்து கணிப்பு முடிவுகளை வெளியிடுவர்.

அதே போன்று, தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களும், சில தனியார் அமைப்புகளும், மாதந்தோறும் மக்களின் மனநிலை மாறுவதாகக் கூறி கருத்து கேட்கப்பட்டதாகக்கூறி கருத்துக் கணிப்புகளை அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆம், அது போல நேற்றும் ஒரு ஆங்கில ஊடகம் இரண்டாவது கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பில் முதலில் மக்களை முட்டாளாக்கியது எப்படி என்றால், முதலமைச்சராக யார் வரவேண்டும் என்பது வாக்காளர்களின் விருப்பமாக உள்ளது என சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சசிகலா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், மருத்துவர் ராமதாஸ், கே.எஸ்.அழகிரி, ஓ.பன்னீர்செல்வம், மற்றவர்கள் என பட்டியலிட்டு விழுக்காடு எவ்வளவு என குறிப்பிட்டுள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சர் வேட்பாளராக மக்கள் விரும்புவதாக கூறியுள்ளனர். அதிலும், மருத்துவர் ராமதாஸ் எந்த தேர்தலிலும் இதுவரை நிக்காத நிலையில், அவரை எப்படி முதலமைச்சர் வேட்பாளராக சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அன்புமணி ராமதாசை குறிப்பிடுவது என்றால், அவரும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ளாக அவரும் அறிவித்துள்ளார்.

அதே போன்று, திமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி எப்படி முதலமைச்சர் வேட்பாளராக முடியும்? சசிகலா கடந்த வாரமே அரசியலில் இருந்து விலகிவிட்டார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்து சில மாதங்கள் கடந்து விட்டன.

அப்படி இருக்கும் போது, அரசியல் களத்தில், இல்லாத மருத்துவர் ராமதாஸ், ரஜினிகாந்த், சசிகலா ஆகியோர் எப்படி கருத்துக் கணிப்பில் முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் வந்தனர் என்ற கேள்வி எழுகின்றது. அதிலும், அடுத்த கேள்விகள் பிரதமர் மோடியை மையமாக வைத்து கேட்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நடுவண் அரசின் செயல்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை தான். ஆனால், அது முழுக்க முழுக்க நடுவண் அரசை மட்டுமே வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதற்கு, தேசிய கட்சிகள் சொற்ப இடங்களில் போட்டியிடுவதும், படுதோல்வி அடைவதிலும் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

எத்தனை தொகுதிகள் அதிமுக கூட்டணிக்கு, திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்ற எண்ணிக்கையும், வாக்கு விகிதமும் இந்த கருத்துக் கணிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஊரில் எவ்வளவு மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்கப்பட்டது? அவர்களிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டு, கருத்துக்கள் பெறப்பட்டன? என்ற எந்த விவரமும் கருத்துக் கணிப்பை நடத்தியவர்கள் வெளியிடவில்லை.

முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்? யார்யாரெல்லாம் தேர்தல் களத்தில் உள்ளனர்? என்பது கூட தெரியாத சிலர், கருத்துக் கணிப்பு என்ற பெயரில் ஒருசிலரை மகிழ்விக்கவும், மக்களை முட்டாள்களாக்கவும் தான் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. மொத்தத்தில் இது கருத்துக் கணிப்பு இல்லை, மாறாக கருத்து திணிப்பாகவே பார்க்கப்படுகிறது.

தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக இதுபோன்று பல்வேறு கருத்துக் கணிப்புகள், ஒருசிலரின் கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்தும் கருத்து திணிப்பாக வெளியிட்டு மக்களை முட்டாள்களாக்குகின்றனர். இப்படிப் போன்றவர்களால்தான், தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில மக்களும் ஏமாற்றப்படுகிறார்.

மாற்றத்தை ஏற்படுத்த பல்வேறு போராட்டங்கள், பரப்புரைகள் செய்து மக்களை சந்தித்து வரும் கட்சிகள் மத்தியில், பணத்தை பிரதானமாக வைத்து கருத்துக் கணிப்பு என்று தனக்கு சாதகமான ஒன்றை வெளியிட்டு ஒரே நாளில் மக்களை 5 ஆண்டுகளுக்கு அடிமையாக்க பார்க்கின்றனர். இதற்காகத்தான், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், பிந்தைய கருத்துக் கணிப்புகள் போன்றவற்றை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here