சவாலுக்கு சவால்! சட்டசபையில் மா சுப்பிரமணியன் மாஸ் ஸ்பீச்!

0
61

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த இருக்கின்ற திமுக தலைமையிலான அரசு தற்சமயம் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான ஆணையம் நீட் தேர்வின் தாக்கம் தொடர்பான ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இதனைத்தொடர்ந்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்த பரிந்துரைகளை ஆராய்வதற்காக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் உயர்மட்ட அலுவலர்களை கொண்ட ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது.

தற்சமயம் நடந்த வரும் சட்டசபை கூட்டத்தொடரில் சுகாதாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் நீட் தேர்வுக்கு எதிரான புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியானது.

இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் சட்ட சபையில் உரையாற்றிய கன்னியாகுமரி சட்டசபை அதிமுகவின் உறுப்பினர் தளவாய்சுந்தரம் நீட் தேர்வுக்கான அறிவிக்கை சென்ற காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.. இருந்தாலும் அதிமுக ஆட்சி காலத்தில் அந்த அறிவிக்கை கொண்டுவரப்பட்டதாக ஒரு தவறான தகவலை ஆளும் கட்சி கூறி வருவதாக தெரிவித்திருக்கின்றார். நீட் தேர்வு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் தனியாக நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாராக இருக்கிறாரா? என்று சவால் விடுத்து இருக்கிறார்.

அவருடைய இந்த சவாலுக்கு பதிலளித்து உரையாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், நீட் தேர்வு தொடர்பான விவாதத்தை தனியாக வைத்தால் அந்த விவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன் .நீங்கள் சொல்கின்ற அல்லது காட்டுகின்ற எந்த ஒரு ஆவணத்தையும் நான் எதிர் கொள்வதற்கு தயாராக உள்ளேன், இதே சட்டசபையில் இருந்து நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானம் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது, குடியரசுத் தலைவரும் அதனை திருப்பி அனுப்பிவிட்டார். இந்த இரண்டு விஷயமும் எப்போதாவது இந்த அவைக்கு தெரிவிக்கப்பட்டதா என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய மா சுப்பிரமணியன் குடியரசுத் தலைவரின் உத்தரவுக்கு எந்தவிதமான விளக்கத்தையும் நாம் கேட்க இயலாது என்பது வழக்கறிஞரான தங்களுக்கும் நன்றாகவே தெரியும். அப்படி இருக்கும் பட்சத்தில் குடியரசுத்தலைவர் நீட் குறித்த தீர்மானத்தை திருப்பி அனுப்பிய பின்னரும் அன்றைய முதலமைச்சரின் அறிவுறுத்தலை ஏற்று சட்டத்துறை சார்பாக மத்திய அரசுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்படுகின்றது. அதில் நீட் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைப்பதற்கான காரணத்தை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதற்கு விளக்கம் கேட்க இயலாது என தெரிந்திருந்தும் கூட இப்படி தொடர்ச்சியாக காலம் கடத்தியது நீங்கள்தானே, இதனை உறுதிப் படுத்தி சொல்லிவிடுங்கள் என்னிடம் இருக்கும் ஆவணங்களை நான் உங்களிடம் காண்பிக்கிறேன். உங்களிடமிருக்கும் ஆவணங்களை எடுத்து வாருங்கள் நாளையே சபாநாயகர் முன்பு தனி விவாதத்தை தொடங்கலாம் என்று கூறியிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்.