எம்பிக்களின் ஆதரவுடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரனில் விக்ரமசிங்கே! மக்கள் ஆதரவு கிடைக்குமா?

0
76

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் தற்போது அந்த நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து காணப்படாத பொருளாதார நெருக்கடியில் தற்போது சிக்கி இருக்கிறது. இதன் காரணமாக, அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உணவுப் பொருட்கள் மருந்து பொருட்கள், விவசாய பொருட்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பற்றாக்குறை காரணமாக, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பொது மக்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக, அந்த நாட்டை விட்டு ஓடிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் அவரையும் அந்த பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், புதிய அறிவுரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய இடைக்கால அதிபராக இருந்து வரும் ரணில் விக்ரம சிங்கே, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அனுரா குமார திசநாயக, ஆளும் இலங்கை பொது ஜன பெரமுன கட்சியிலிருந்து பிரிந்து சென்ற டலஸ் அலகபெருமா, உள்ளிட்டோர் போட்டியிட்டதால் மும்மூனை போட்டி நிலவியது.

ஆகவே நேற்று நடந்த அதிபர் தேர்தலில் முதல்முறையாக அந்த நாட்டு சபாநாயகர் வாக்களித்தார் இதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று ரனில் விக்ரமசிங்கே அதிபராக வெற்றி பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அதிபர் தேர்தலில் 134 வாக்குகள் பெற்று ரனில் விக்கிரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இவர் 2024 ஆம் வருடம் நவம்பர் மாதம் வரையில் அதிபர் பதவியில் இருப்பார் டலஸ் அலகபெருமாவுக்கு வெறும் 82 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அனுரா திசநாயக 3 வாக்குகள் மட்டுமே பெற்றார். 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய வாக்குகளில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது.

இடைக்கால அதிபராக இருந்த ரனில் விக்கிரமசிங்கே முறைப்படி அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில் 6 முறை பிரதமராக இருந்த ரனில் விக்கிரமசிங்க 8வது அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தாலும் மக்கள் ஆதரவு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருப்பதாக தெரிகிறது.