நம்முடைய நோக்கம் இதுதான்! பாட்டாளிகள் தொடர்ந்து செயல்படுங்கள் ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

0
70

கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களின் நலனுக்காக பல விஷயங்களை முன்னெடுத்து இருக்கிறது. இதனால் பல போராட்டங்களையும் அந்த கட்சி சந்தித்து இருக்கிறது. அதோடு பல்லாயிரக்கணக்கான உயிரும் பறி போயிருக்கின்றன இதற்கு உதாரணம் கடந்த 1987-ம் வருடம் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது.அந்த சமயத்தில் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி இருபத்தி ஒரு வன்னியர் இனத்தை சேர்ந்தவர்கள் தமிழக காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் சிறைக்குச் சென்றார்கள்.

இப்படி வன்னியர் இனத்தின் முன்னேற்றத்திற்காக பல கட்ட போராட்டங்களையும் பலமுறை சிறை வாழ்வையும் சந்தித்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.

இந்த சூழ்நிலையில், அதிமுக கூட்டணியில் சென்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி எதிர்வரும் 9 மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் அந்த கட்சிக்கு பெரிய அளவில் எந்த விதமான ஆதாயமும் கிடைக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பாக பாடாண் திணை கவியரங்கம் இணைய வழி மூலமாக நடந்தது. இதில் பங்கேற்று பேசிய ராமதாஸ் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நாம் பெற்றிருக்கின்றோம். நம்முடைய மிரட்டலுக்கு பணிந்து தான் தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வில்லை என்றால் கூட்டணி தேவை இல்லை என்று நான் தெரிவித்தேன். தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டு இருக்கின்ற 10.5 சதவீத இட ஒதுக்கீடு நமக்கு போதுமானது கிடையாது 15 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதே நம்முடைய நோக்கமாக இருக்கிறது என கூறியிருக்கிறார் ராமதாஸ்.

தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் இருக்கிறது என்று நிரூபித்தால் அவர்களுக்கு நான் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கிறேன். தமிழ் வளர்ச்சி மற்றும் மதுவிலக்கிற்காக நாம் கோட்டையை கைப்பற்ற வேண்டும். கட்சி நிர்வாகிகள் அதற்கான வேலைகளை ஆரம்பியுங்கள் என தெரிவித்திருக்கிறார் ராமதாஸ். தற்போது இவர் தெரிவித்திருக்கும் கருத்தை பார்த்தோமானால் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே போட்டியிடுவோம் என்ற ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது.