அயோத்தி ராமர் கோவில்: 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்.. கட்டுமான பணிகளில் களமிறங்கும் சென்னை ஐஐடி நிபுணர்கள்..!!

0
130

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையிலான கற்களால் கட்டப்பட்டு வருவதாக அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்று 40 கிலோ வெள்ளியினால் ஆன செங்கல்லை கொண்டு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகளும் தற்போது தொடங்கியுள்ளது.

அயோத்தி நகரில் மொத்தம் 67 ஏக்கர் நிலப்பரப்பில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் அமைய உள்ளது. நகரா என்ற கோவில் கட்டிடக் கலை போலவே, ராமர் கோவிலும் கட்டப்பட உள்ளது. இதில் 10 ஏக்கரில் கோவிலும், மீதமுள்ள 57 ஏக்கர் கோவில் வளாகமாகவும் கட்டுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்தசேத்திரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய், சிவில் கட்டுமான பணிகள், எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை ஐஐடி, மத்திய கட்டட ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் மிகப்பெரிய நிபுணர்களும் ராமர் கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

லார்சன் அண்ட் டவுபரோ நிறுவனம் பொதுவான கட்டுமானப் பணிகளை கவனித்து வந்தாலும் அயோத்தி கோவில் நிலத்தின் மண்வளம் , நிலநடுக்கத்தைத் தாங்கும் வலிமை போன்றவற்றை சென்னை ஐஐடி நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

 

பூகம்பம், புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்தாலும் பாதிக்கப்படாத வகையில் கோவில் முழுவதும் கற்களால் கட்டப்படுகிறது. மேலும், கட்டுமானத்திற்கு 10,000 தாமிர கம்பிகள் தேவைப்படுவதாகவும் பக்தர்கள் தாமிரக் கம்பிகளை கோவிலுக்கு தானமாக வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைய 36 முதல் 40 மாதங்கள் வரை ஆகலாம் என்று இந்தக் கட்டுமான திட்டத்தின் தலைமை கட்டட கலைஞரான சந்திரகாந்த்பாய் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K