அனைத்து பக்கமும் அடைக்கப்பட்ட கதவுகள்! வேறுவழியில்லாமல் முதலமைச்சர் எடுத்த முடிவு!

0
83

புதுச்சேரியில் இதுவரையில் காங்கிரஸ் கட்சி மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சி என்ற இரு கட்சிகளுக்கும் தான் அதீத போட்டி நிலவி வந்தது. அதில் பல முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல சென்ற சில வருடங்களுக்கு முன்னர் புதிதாக தொடங்கிய என்ஆர் ரங்கசாமி தலைமையிலான என் ஆர் காங்கிரஸ் கட்சி இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. தற்போது அந்த கட்சி மூன்றாவது முறையாகவும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இதில் என்ன வித்தியாசம் என்றால் இந்த முறை என் ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி இருந்தாலும் அந்த கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. நீண்டகாலமாக புதுச்சேரியில் காலூன்ற நினைக்கும் பாஜக இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது.

இந்தநிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி அன்று ஒரே ஒரு இடத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற இருக்கிறது இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அதாவது இன்றைய தினம் நிறைவடைய இருக்கிறது. புதுச்சேரியில் இந்த தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே போட்டி நிலவியது. பாஜகவிற்கு 6 சட்டசபை உறுப்பினர்கள் மூன்று சுயட்சை சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் தாங்கள் நிறுத்தும் வேட்பாளரை என்ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கவேண்டும் என பாஜக தீர்மானம் நிறைவேற்றி முதலமைச்சர் ரங்கசாமி இடம் வழங்கியிருக்கிறார்கள்.

சட்டசபையில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 10 சட்டசபை உறுப்பினர்கள் இருப்பதால் தங்களுடைய கட்சியை சேர்ந்த ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்க ரங்கசாமி விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் இதில் பிடிவாதம் இருந்தன. இது குறித்து புதுச்சேரி பாஜகவைச் சார்ந்தவர்கள் கட்சி மேலிடத்துடன் தொடர்ச்சியான ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்கள். அத்துடன் பாஜக மேலிடம் நேரடியாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இடம் பேசி அந்த இடத்தை பாஜகவிற்கு விட்டுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே முதலமைச்சர் ரங்கசாமி என் ஆர் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் ஒரு சிலரும் ஆளுநர் தமிழிசையை சந்தித்து உரையாற்றி இருக்கிறார்கள். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் குறித்து அந்த சமயத்தில் பேச பட்டதாகவும் தகவல் வெளியாகின.

இந்த சூழ்நிலையில், இறுதிக்கட்டமாக பாஜகவிற்கு என் ஆர் காங்கிரஸ் இன்னொரு யோசனையை சொல்லி இருக்கிறது. அதாவது 2015ஆம் ஆண்டில் தன்னுடைய நண்பர் கோகுலகிருஷ்ணன் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக நிறுத்துவதற்கு ரங்கசாமி விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் அந்தக் கட்சியை சார்ந்த சட்டசபை உறுப்பினர்கள் ஒரு சிலர் ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டார்கள். இதனால் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக, அவர் அதிமுகவில் இணைத்து அந்த கட்சியின் ஆதரவுடன் நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தார் ரங்கசாமி .,அதேபோலதான் தற்சமயம் தான் விரும்பும் நபரை பாஜகவில் இணைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கிவிடலாம் என்றும் என் ஆர் காங்கிரஸ் கட்சி பாஜகவிற்கு யோசனை தெரிவித்து இருப்பதாகவும், அந்த கட்சியின் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

இருந்தாலும் இந்த யோசனையை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையை உடனடியாக நிராகரித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் என்ஆர் காங்கிரஸ் பாஜகவிற்கு அந்த இடத்தை விட்டுக் கொடுத்தது. இருந்தாலும் அந்த கட்சி சட்டசபை உறுப்பினர்கள் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்துவதாகவும், பாஜக தலைமை விரும்புவதால் வேறு வழியில்லாமல் இதை செய்து தான் ஆக வேண்டும் என்று ரங்கசாமி கட்சி சட்ட சபை உறுப்பினர்களை சமாதானப் படுத்தியதாகவும், சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் சென்ற ஒருவாரத்திற்கு மேலாக இழுபறி நீடித்து வந்த சூழ்நிலையில், சுமுகமாக முடிந்ததால் மாநிலங்களவை வேட்பாளராக செல்வகணபதி அவர்களை பாஜக மேலிடம் அறிவித்திருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 10 சட்டசபை உறுப்பினர்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு சுயேட்சை சட்டசபை உறுப்பினர்கள் 3 பேரின் ஆதரவுடன் ஒட்டுமொத்தமாக 9 சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருக்கின்ற நிலையில், திமுக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி சார்பாக யாரும் இதுவரையில் களமிறங்கவில்லை இனிமேலும் களம் காணாவிட்டால் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றாகிவிடும். இதன்மூலமாக புதுச்சேரியிலிருந்து முதல்முறையாக பாஜகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் கிடைப்பார் என்று சொல்லப்படுகிறது.