கடந்த காலங்களில் பாகிஸ்தான் செய்த தவறுகளை மீண்டும் செய்ய கூடாது அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

கடந்த காலங்களில் பாகிஸ்தான் செய்த தவறுகளை மீண்டும் செய்ய கூடாது அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புப்படை வீரர்கள், தீவிரவாதிகள் என யார் வந்தாலும் அவர்கள் திரும்பி போகக் கூடாது. கடந்த கால வரலாற்றில் 1965, 1971-ம் ஆண்டுகளில் செய்த தவறுகளை போல அவர்கள் மீண்டும் செய்யக் கூடாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பாஜக அரசு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட  ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி உத்தரவிட்டது.இவ்வாறு பாஜக அரசால்  370-வது பிரிவு திரும்பப் பெற்றப்பட்டது ஏன் என்பது குறித்து மக்களுக்கு பாஜக சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி,பிஹார் தலைநகரான பாட்னாவில் ஜன் ஜாக்ரன் சபா என்ற மக்கள் விழிப்புணர்வுகூட்டம் பாஜக சார்பில் இன்று நடந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் பாஜக அரசின் சார்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

”பாகிஸ்தான் ஏற்கெனவே நம்பிக்கை இழந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா எல்லைப் பகுதிக்குள் யாரும் செல்லாதீர்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இது மிகவும் நல்ல அறிவுரை. ஏனென்றால், அந்தத் தவறை அவர்கள் மீண்டும் செய்து இந்திய எல்லைக்குள் அத்துமீறினால் அவர்கள் பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லமாட்டார்கள். கடந்த 1967, 1971-ம் ஆண்டு செய்த தவறுகளைச் செய்துவிடக்கூடாது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கும், 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றதற்கும், அந்த மாநிலத்தில் உள்ள மக்களில் நான்கில் 3 பகுதியினர் ஆதரவு தெரிவிக்கிறார்கள். 370-வது பிரிவை நீக்க வேண்டும் எனும் நிலைப்பாட்டில் பாஜக ஒருபோதும் மென்மையான போக்கைக் கையாண்டதில்லை. இந்தப் பிரிவை நீக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், நேர்மையாகவும் இருந்து வருகிறது.

காஷ்மீருக்கு 370-வது பிரிவு என்பது புற்றுநோய் போன்றது. அதை எடுத்தவுடன் ரத்தம் வருகிறது. காஷ்மீரில் தீவிரவாதச் செயல்கள் காரணமாக அங்கு ரத்தம் படிந்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவை நீக்கியதைப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் எல்லை தாண்டி தீவிரவாதிகளை நம் நாட்டுக்குள் அனுப்ப முயல்கிறது.

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே அந்நாட்டுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கும். ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நாட்டு மக்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். இனிமேல் பாகிஸ்தானுடன் பேச்சு என்றால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும்தான்.

பாகிஸ்தான் தொடர்ந்து பலூச்சி மக்களுக்கு எதிராகவும், பஸ்தூன் மக்களுக்கு எதிராகவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இதுபோல் தொடர்ந்து பாகிஸ்தான் செய்துவந்தால், பாகிஸ்தான் வரும் காலங்களில் இன்னும் துண்டு துண்டாகச் சிதறுவதை யாராதும் தடுக்க முடியாது”என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Copy
WhatsApp chat