பாயும் அமைச்சர் ! பீதியில் அதிகாரிகள் !! பரிதவிக்கும் பாமரர்கள்!!!

0
74

பாயும் அமைச்சர்! பீதியில் அதிகாரிகள்!! பரிதவிக்கும் பாமரர்கள்!!!

“மழை நீர் சேகரிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு நடைபெறுகின்றதா? என்பதை கவனிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பெரு மழையினால் கோவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் வேகமாக நிரம்புவது மகிழ்ச்சளித்தாலும் இன்னொருபக்கம் குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களின் நிலை பரிதவிப்புக்குள்ளாயிருக்கிறது.

சேதமடைந்த தரைப்பாலம்

இந்நிலையில், கனமழையில் அரித்துச்செல்லப்பட்ட சிங்காநல்லூர் வெள்ளலூர் இடையிலான தரைப்பாலம் மற்றும் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் தரைப்பாலம் ஆகியவற்றை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், “தொடர் மழைப்பொழிவால் நீலகிரியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைத் துறை உயர் அதிகாரிகள் நீலகிரியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் 275.47மி. மீட்டர் மழை பெய்துள்ளது.

லேசான மழையின்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவிட்டதால் சின்னச் சின்ன பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்த மழையினால் கோவை மக்களுக்கு மகிழ்ச்சிதான். நொய்யல் ஆற்றில் 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கோவையில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிறைந்துள்ளது. எல்லா வாய்க்கால்களும் குளங்களும், தூர்வாரபட்டுள்ளதால் நீர்நிலைகளில் நிரம்பிவருகின்றன. நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தாலும் குளங்களுக்குச் செல்லும் பாதை சிறியது என்பதால் குளங்கள் மெதுவாக நிரம்பி வருகிறது. செங்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக அது சரி செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 1335பேர் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 72 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளது, 27 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தங்கள் இருப்பிடம் பாதுகாப்பானது இல்லை என்று கருதினால் பொதுமக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு வந்துவிட வேண்டும். ராவத்தூரில் சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்றுப் தரைப்பாலம் உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படும். அதற்கு இப்போதே அதற்கு உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்றார்.

மாலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , “நீலகிரி மாவட்டத்தில் பெருக்கெடுத்த மழைவெள்ளம் பவானி ஆற்றின் வழியாக பவானி சகார் அணைக்குச் செல்கிறது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த முறை வெள்ளம் வந்த போதும் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, மாற்று வீடு கட்டிதருவதாக அம்மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதோடு மட்டுமல்லாது, அதற்காக 3 ஏக்கர் நிலமும் ஏற்கனவே ஒதுக்கியிருந்த நிலையில் தற்போது 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
அடுத்த முறை வெள்ளம் வருவதற்குள் பவானி கரையோர மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மழை நீர் சேகரிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு நடைபெறுகின்றதா? என்பதை அதிகாரிகள் கவனிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மழை நீர் அனைத்தும் நிலத்தடிக்குள் செல்ல வேண்டும்.” என்று தனது பாணியில் அதிகாரிகளை  எச்சரித்தார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்


author avatar
Parthipan K