“பூம்ராவுக்கு மறுபடி காயம் ஏற்பட இவர்கள் அவசரப்பட்டதுதான் காரணம்…” முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

0
89

“பூம்ராவுக்கு மறுபடி காயம் ஏற்பட இவர்கள் அவசரப்பட்டதுதான் காரணம்…” முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா முதுகு காயத்தால் டி 20 உலகக்கோப்பை தொடரை இழக்க வாய்ப்புள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் மையமாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பூம்ரா விளையாடவில்லை. அவர் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுவதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறி இருந்தார். மேலும் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்தும் முழுவதுமாக விலகினார்.

இதையடுத்து பூம்ரா டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இன்னும் 6 மாத காலத்துக்கு அவர் கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பூம்ரா மீண்டும் காயமடைந்ததற்குக் காரணம் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் அவசரமே காரணம் என முன்னாள்  வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார். இது சம்மந்தமாக “ஆஸ்திரேலியா தொடரில் அவசரப்பட்டு அவரை விளையாட வைத்துவிட்டார்கள். அவருக்கு ஓய்வளித்திருந்தால் அவர் டி 20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராக வந்திருப்பார்.” எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில் பிசிசிஐ தலைவர் கங்குலி “பூம்ரா இன்னும் உலகக்கோப்பை தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிடவில்லை. அவர் அணியோடு ஆஸ்திரேலியா செல்வரா மாட்டாரா என்பது இன்னும் 3 நாட்களில் தெரியவரும்” எனக் கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலை தந்துள்ளது.